அ.தி.மு.க. ஆட்சி மீண்டும் அமைய சபதம் ஏற்போம் வைத்திலிங்கம் எம்.பி. பேச்சு

அ.தி.மு.க. ஆட்சி மீண்டும் அமைய சபதம் ஏற்போம் என்று வைத்திலிங்கம் எம்.பி. கூறினார்.
அ.தி.மு.க. ஆட்சி மீண்டும் அமைய சபதம் ஏற்போம் வைத்திலிங்கம் எம்.பி. பேச்சு
Published on

தஞ்சாவூர்,

தஞ்சை தெற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் எம்.ஜி.ஆரின் 104-வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் தஞ்சையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட அவைத்தலைவர் திருஞானசம்பந்தம் தலைமை தாங்கினார். இணைசெயலாளர் சாவித்திரிகோபால், பொருளாளர் மகாலிங்கம், அறங்காவலர் குழு தலைவர் மதியழகன், வேளாண் விற்பனைக்குழு தலைவர் துரைமாணிக்கம், பகுதி செயலாளர்கள் அறிவுடைநம்பி, சரவணன், ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கோட்டை பகுதி செயலாளர் புண்ணியமூர்த்தி வரவேற்றார்.

கூட்டத்தில் அ.தி.மு.க. துணை ஒருங்கிணைப்பாளரும், மாவட்ட செயலாளருமான வைத்திலிங்கம் எம்.பி. கலந்து கொண்டு பேசியதாவது:-

தேடி வருபவர்களுக்கு கொடுப்பவர் வள்ளல். ஆனால் தேடிச்சென்று கொடுப்பவர் வள்ளலுக்கு வள்ளல் என்று அண்ணாவால் பாராட்டப்பட்டவர் எம்.ஜி.ஆர். அவர் புகழ் இன்றளவும் உள்ளதற்கு அவர் செய்த பணி தான். 1967-ல் அண்ணா முதல்-அமைச்சராக பதவி ஏற்ற போது இந்த வெற்றி எம்.ஜி.ஆரால் கிடைத்தது என்று பெருந்தன்மையுடன் கூறினார்.

அடிப்படை வசதி

ஆனால் அண்ணா மறைவுக்குப்பின்னர் எம்.ஜி.ஆரால் முதல்-அமைச்சரான கருணாநிதி, கழகம் தான் குடும்பம் என்பதை மறந்து தனது குடும்பம் தான் கழகம் என்று எண்ணினார். எம்.ஜி.ஆரை கட்சியை விட்டு நீக்கினார். அதன் பின்னர் எம்.ஜி.ஆர். அ.தி.மு.க.வை தொடங்கி தனது இறுதிமூச்சுவரை யாரும் வெல்ல முடியாத இயக்கமாக மாற்றினார்.

எம்.ஜி.ஆர். முதல்-அமைச்சராகி தன்னிறைவு திட்டத்தை கொண்டு வந்து மக்களுக்கு அடிப்படை வசதிகளை செய்து கொடுத்தார். சத்துணவு திட்டம், 5-வது உலக தமிழ் மாநாடு, தஞ்சையில் தமிழ்ப்பல்கலைக்கழகம் கொண்டு வந்தார். அவர் வழியில் ஜெயலலிதாவும் சிறப்பாக ஆட்சி நடத்தி மாணவர்களுக்கு மடிக்கணினி, தாலிக்கு தங்கம், விலையில்லா சைக்கிள் போன்ற பல திட்டங்களை நிறைவேற்றி ஏழை, எளிய மக்களின் சமூக பொருளாதாரம் மேம்பட பல திட்டங்களை தந்தார்.

தகுதி கிடையாது

ஜெயலலிதா வழியில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சிறப்பாக ஆட்சி நடத்தி வருகிறார்கள். ஊழல் பற்றி பேச தி.மு.க. தலைவர் ஸ்டாலினுக்கு எந்த தகுதியும் கிடையாது. ஊழலை அறிமுகப்படுத்தியதே கருணாநிதி தான். ஜெயலலிதா கூறியது போல அ.தி.மு.க. கட்சியும், ஆட்சியும் 100 ஆண்டுகளுக்கு இருக்கும் என்றார். அதனை நிரூபிக்கும் வகையில் மீண்டும் அ.தி.மு.க. ஆட்சி அமைய எம்.ஜி.ஆர். பிறந்த நாளில் சபதம் ஏற்போம்.இவ்வாறு அவர் கூறினார். கூட்டத்தில் எம்.எல்.ஏ.க்கள் சேகர், கோவிந்தராஜன், தொழில்நுட்ப பிரிவு மண்டல செயலாளர் வினுபாலன், பேச்சாளர்கள் அமுதா, கிருபாகரன், மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் துரை.திருஞானம், முன்னாள் எம்.பி. பரசுராமன், அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற இணை செயலாளர் ராமச்சந்திரன், பால்வள தலைவர் காந்தி, மகளிரணி செயலாளர் அமுதாரவிச்சந்திரன், மொத்த கூட்டுறவு பண்டக சாலை தலைவர் பண்டரிநாதன் மற்றும் ஒன்றிய, நகர செயலாளர்கள், பிரிவு செயலாளர்கள், மாவட்ட நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

முடிவில் பட்டுக்கோட்டை நகர செயலாளர் பாஸ்கர் நன்றி கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com