சென்னை ஐகோர்ட்டு உத்தரவின்படி கோவையில் 271 விளம்பர பேனர்கள் அகற்றப்பட்டன

சென்னை ஐகோர்ட்டு உத்தரவின்படி கோவையில் அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த 271 விளம்பர பேனர்கள் நேற்று அகற்றப்பட்டன.
சென்னை ஐகோர்ட்டு உத்தரவின்படி கோவையில் 271 விளம்பர பேனர்கள் அகற்றப்பட்டன
Published on

கோவை,

கோவையில் எம்.ஜி.ஆர்.நூற்றாண்டு விழா நாளை(ஞாயிற்றுக்கிழமை) பிற்பகல் 3 மணிக்கு வ.உ.சி. பூங்கா மைதானத்தில் நடக்கிறது. இதையொட்டி கோவையின் பல்வேறு இடங்களில் அலங்கார வளைவுகள். பேனர்கள், கட்அவுட்கள் வைக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில் கடந்த 25ந் தேதி அதிகாலை ஹோப் காலேஜ் பகுதியில் வைக்கப்பட்டிருந்த அலங்கார வளைவு சவுக்கு கம்பத்தின் மீது ஆர்.ஜி.புதூரை சேர்ந்த என்ஜினீயர் ரகுபதி வந்த மோட்டார் சைக்கிள் மோதி கீழே விழுந்தார். அப்போது அந்த வழியாக வந்த லாரி அவர் மீது மோதியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் கோவை மட்டுமல்லாமல் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இது தொடர்பாக கோவை சிங்காநல்லூர் தி.மு.க. எம்.எல்.ஏ. கார்த்திக் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர், கோவையில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவுக்காக அனுமதியின்றி வைக்கப்பட்ட அலங்கார வளைவுகள். பேனர்கள், கட்அவுட்கள் ஆகியவற்றை உடனடியாக அகற்ற வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

இதைத் தொடர்ந்து கோவையில் உள்ள பல்வேறு சாலைகளில் தனியார் நிறுவனங்கள் சார்பில் அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த விளம்பர போனர்கள், மின்சார கம்பங்களில் வைக்கப்பட்டிருந்த சிறிய பதாகைகள் உள்பட மொத்தம் 271 பேனர்கள் நேற்று அகற்றப்பட்டன. ஆனால் இதில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவுக்காக வைக்கப்பட்டிருந்த அலங்கார வளைவுகள், பேனர்கள், கட்அவுட்கள் எத்தனை அகற்றப்பட்டன என்று தெரியவில்லை. இதற்கிடையில் கோவைஅவினாசி சாலை லட்சுமி மில் சந்திப்பு, சத்தி சாலையில் வைக்கப்பட்டிருந்த எம்.ஜி.ஆர்.நூற்றாண்டு விழா பேனர்களும் அகற்றப்பட்டன.

இதுகுறித்து கோவை மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது:

கோவையில் அனுமதியின்றி வைக்கப்பட்ட தனியார் நிறுவன விளம்பர பேனர்கள், சிறிய பதாகைகள் மொத்தம் 271 அகற்றப்பட்டன. இதில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவுக்காக வைக்கப்பட்டிருந்த பேனர்களும் அகற்றப்பட்டுள்ளன. இது தவிர தற்போது சாலையோரம் வைக்கப்பட்டுள்ள எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவுக்காக வைக்கப்பட்டுள்ள பேனர்கள், அலங்கார வளைவுகள், கட்அவுட்கள் ஆகியவற்றுக்கு அனுமதி பெறப்பட்டுள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com