தீபாவளி பண்டிகைக்கு பிறகு கோவில்பட்டி தினசரி மார்க்கெட்டில் ஓடை ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் - அமைச்சர் கடம்பூர் ராஜூ தகவல்

தீபாவளி பண்டிகைக்கு பிறகு, கோவில்பட்டி தினசரி மார்க்கெட்டில் ஓடை ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் என அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்தார்.
தீபாவளி பண்டிகைக்கு பிறகு கோவில்பட்டி தினசரி மார்க்கெட்டில் ஓடை ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் - அமைச்சர் கடம்பூர் ராஜூ தகவல்
Published on

கோவில்பட்டி,

கோவில்பட்டியில் கடந்த 30-ந் தேதி இரவு பெய்த மழையினால் நகராட்சி தினசரி மார்க்கெட்டில் மழைநீர் புகுந்து கடைகளில் வைக்கப்பட்டிருந்த அரிசி, பருப்பு, காய்கறி, பழங்கள் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டு பல லட்சக்கணக்கான பொருட்கள் சேதம் அடைந்தது. இதைக் கேள்விப்பட்ட அமைச்சர் கடம்பூர் ராஜூ தினசரி மார்க்கெட்டிற்கு 31-ந் தேதி சென்று மார்க்கெட் முழுவதும் பார்வையிட்டு கடைக்காரர்களிடம் குறைகளை கேட்டார்.

மார்க்கெட் முன்புள்ள மெயின் ரோட்டில் உள்ள ஓடையில் தண்ணீர் சீராக செல்வதற்கும், ஓடையில் உள்ள மணல் திட்டுகளை அப்புறப்படுத்துவதற்கு நெடுஞ்சாலைத்துறை மற்றும் நகரசபை அதிகாரிகளுக்கு அமைச்சர் உத்தரவிட்டார். இதனையொட்டி நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள், நகரசபை அதிகாரிகள் மார்க்கெட் ரோடு மார்க்கெட்டில் உள்புறம் உள்ள ஓடைகள் மெயின் ரோட்டில் உள்ள ஓடைகளை மழைநீர் செல்ல வசதியாக மணல் மேடுகளை அப்புறப்படுத்தி ரோடு ஓரங்களில் உள்ள மணல் திட்டு களையும் வெளியேற்றினார்கள்.

இந்த நிலையில் நேற்று அமைச்சர் கடம்பூர் ராஜூ, தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி, நகரசபை என்ஜினீயர் கோவிந்தராஜன், நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள், தாசில்தார் மணிகண்டன் ஆகியோர் மார்க்கெட்டிற்கு சென்று ஆய்வு நடத்தினார்கள்.

அமைச்சரிடம் நகரசபை தினசரி மார்க்கெட் வியாபாரிகள் சங்கத் தலைவர் ராஜேந்திரன், சிறு வியாபாரிகள் சங்கத் தலைவர் பால்ராஜ் மற்றும் சமத்துவ மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் பாஸ்கர் ஆகியோர் நுழைவு வாயிலில் இருந்து சாலை வசதி, மின் வசதி, வாறுகால் அகலப்படுத்துதல், மெயின் ரோட்டில் உள்ள ஓடையை சீர்படுத்துதல் போன்ற பணிகளை செய்வதுடன், மழைநீர் மார்க்கெட்டிற்குள் புகுந்ததால் நஷ்டமடைந்த வியாபாரிகளுக்கு இழப்பீட்டு தொகை கிடைக்க அமைச்சர் ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர். இதை தொடர்ந்து மார்க்கெட்டின் உள்புறம் வழியாக மெயின் ரோட்டிற்கு வந்து அங்குள்ள ஓடையில் தூர்வாரிய பகுதிகளை அமைச்சர் பார்வையிட்டார்.

பின்னர் அமைச்சர் கூறுகையில்,தீபாவளி பண்டிகை முடிந்தவுடன் மெயின்ரோடு ஓடை ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணிகள் தொடங்கும் என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com