நாடாளுமன்ற தேர்தலுக்கு பின் மிகப்பெரிய மாற்றம் ஏற்படும் அமைச்சர் கந்தசாமி பேச்சு

நாடாளுமன்ற தேர்தலுக்கு பின் புதுவையில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படும் என்று அமைச்சர் கந்தசாமி தெரிவித்தார்.
நாடாளுமன்ற தேர்தலுக்கு பின் மிகப்பெரிய மாற்றம் ஏற்படும் அமைச்சர் கந்தசாமி பேச்சு
Published on

பாகூர்,

புதுவை அரசு மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை சார்பில் தேசிய பெண் குழந்தைகள் தின விழா கிருமாம்பாக்கத்தில் நடைபெற்றது. விழாவில் துறை இயக்குனர் யஸ்வந்தையா வரவேற்று பேசினார்.

அமைச்சர் கந்தசாமி தலைமை தாங்கி, ஏம்பலம் தொகுதியை சேர்ந்த 576 பெண் குழந்தைகளுக்கு தலா ரூ.250 செலுத்தி அஞ்சலகம் மூலம் செல்வமகள் சேமிப்பு திட்ட கணக்கை தொடங்கிவைத்தார். விழாவில் அமைச்சர் கந்தசாமி பேசியதாவது:-

ஏம்பலம் தொகுதியில் உள்ள பெண் குழந்தைகளுக்கு, என் சொந்த செலவில் செல்வ மகள் சேமிப்பு திட்ட கணக்கு தொடங்கப்படும் என்று அறிவித்தேன். அதன்படி கணக்கு தொடங்கப்பட்டு, அதற்கான பாஸ் புத்தகம் பயனாளிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அங்கன்வாடி மற்றும் அஞ்சலக ஊழியர்கள் மாதந்தோறும் பயனாளிகளிடம் அஞ்சல சேமிப்பு கணக்கில் பணம் சேமிக்க வலியுறுத்த வேண்டும்.

பெண்கள் சுய தொழில் தொடங்க ரூ.ஒரு கோடி வரை கடன் திட்டங்கள் உள்ளன. இதனை பயன்படுத்தி வாழ்க்கையில் முன்னேற வேண்டும். வருகிற நாடாளுமன்ற தேர்தலுக்கு பின் புதுவையில் மிகப்பெரிய மாற்றம் நிகழ இருக்கிறது. மத்தியில் காங்கிரஸ் ஆட்சி பொறுப்பேற்று அனைத்து திட்டங்களும் விரைவாக செயல்படுத்தப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் புதுவை அஞ்சல் கோட்ட முதுநிலை கண்காணிப்பாளர் அகில் நாயர், உட்கோட்ட கண்காணிப்பாளர் முத்துமாரி ஆகியோர் செல்வமகள் சேமிப்பு திட்டத்தின் சிறப்புகள் குறித்து பேசினார்கள். முடிவில் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை துணை இயக்குனர் (பொறுப்பு) வரலட்சுமி நன்றி கூறினார்.

முன்னதாக பெண் குழந்தைகளின் முக்கியத்துவம், உரிமைகள் குறித்து விழிப்புணர்வு ஊர்வலத்தையும் அமைச்சர் கந்தசாமி தொடங்கி வைத்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com