‘காலா’ படத்துக்கு எதிராக மீண்டும் போராட்டம்

‘காலா’ படத்துக்கு எதிராக கர்நாடக திரைப்பட வர்த்தக சபை முன்பு நேற்று மீண்டும் போராட்டம் நடந்தது.
‘காலா’ படத்துக்கு எதிராக மீண்டும் போராட்டம்
Published on

பெங்களூரு,

ரஜினிகாந்த் நடித்து, பா.ரஞ்சித் டைரக்ஷனில், நடிகர் தனுஷ் தயாரித்த காலா படம், வருகிற 7-ந் தேதி திரைக்கு வர இருக்கிறது. மும்பை தமிழர்களின் வாழ்க்கையை பின்புலமாக கொண்ட படம், இது. இதில், ரஜினிகாந்த் ஏழை மக்களுக்காக போராடும் தாதாவாக நடித்து இருக்கிறார். அவருக்கு ஜோடியாக ஈஸ்வரிராவ், ஹூமா குரோசி ஆகிய இருவரும் நடித்துள்ளனர்.

அரசியல் தொடர்பான காட்சிகளும், வசனங்களும் இடம் பெற்று இருப்பதால், படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.

இந்த நிலையில், காவிரி நீர் தொடர்பாக ரஜினிகாந்த் கூறிய கருத்துக்கள் கர்நாடக மக்களுக்கு எதிரானது என்று கூறி, கர்நாடகத்தில் கன்னட அமைப்பினர் போராட்டம் நடத்தினார்கள். கர்நாடகத்தில், காலா படத்தை திரையிடக் கூடாது என்று அவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

அதைத்தொடர்ந்து, காலா படத்துக்கு கர்நாடக திரைப்பட வர்த்தக சபை தடை விதித்து இருக்கிறது. கர்நாடகத்தில், காலா படத்தை திரையிடாவிட்டால், தயாரிப்பாளருக்கு ரூ.20 கோடி வரை நஷ்டம் ஏற்படும் என்று கூறப்படுகிறது.

இதற்கிடையில், காலா படத்தை கர்நாடகத்தில் திரையிடுவதற்கான நடவடிக்கைகளில் படக்குழுவினர் ஈடுபட்டு இருக்கிறார்கள். இதற்கு தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் விஷால் ஆதரவு தெரிவித்தார். காலா படம் திட்டமிட்டபடி எல்லா இடங்களிலும் வெளியாக வேண்டும் என்பதே எங்கள் விருப்பம் என்று அவர் கூறினார்.

இந்த பிரச்சினை தொடர்பாக கர்நாடக முதல்-மந்திரி குமாரசாமி கூறும்போது, கர்நாடக மக்களும், கர்நாடக திரைப்பட வர்த்தக சபையும், காலா படம் வெளியாவதை விரும்பவில்லை. இதுபற்றி நான் ஆலோசித்து முடிவு செய்வேன் என்றார்.

இந்த நிலையில், காலா படத்துக்கு எதிராக நேற்று பெங்களூருவில் மீண்டும் போராட்டம் நடந்தது. கர்நாடக ரக்ஷண வேதிகே(பிரவீன்ஷெட்டி அணி) அமைப்பினர் நேற்று சிவானந்தா சர்க்கிள் அருகே உள்ள கன்னட சினிமா வர்த்தகசபை அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தினர். அந்த அமைப்பினர் திடீரென அங்கு சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் கைது செய்து வேனில் ஏற்றி சென்றனர். சிலர் போராட்டக் முன்னதாக கன்னட சினிமா வர்த்தகசபை தலைவர் சா.ரா.கோவிந்திடம் பிரவீன்ஷெட்டி மனு கொடுத்தார்.

அதைத்தொடர்ந்து பிரவீன்ஷெட்டி நிருபர்களிடம் கூறுகையில், காவிரி பிரச்சினையில் கர்நாடகத்திற்கு எதிராக நடிகர் ரஜினிகாந்த் கருத்து கூறி வருகிறார். அதனால் அவர் நடித்துள்ள காலா படத்தை இங்கு வெளியிட நாங்கள் அனுமதிக்க மாட்டோம். ஒருவேளை கர்நாடகத்தில் அந்த படத்தை வெளியிட்டால் நாங்கள் தீவிரமாக போராட்டம் நடத்துவோம். காவிரி மேலாண்மை ஆணையத்தை மத்திய அரசு அமைத்துள்ளது. இதை நாங்கள் ஏற்க மாட்டோம். காவிரியில் கர்நாடகத்தின் உரிமையை நாங்கள் விட்டுக்கொடுக்க மாட்டோம் என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com