விவசாய நிலத்திற்கு பட்டா கேட்டு பெரம்பலூர் கலெக்டர் அலுவலகம் முற்றுகை

விவசாய நிலத்திற்கு பட்டா கேட்டு பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு நரிக்குறவர் இன மக்கள் போராட்டம் நடத்தினர்.
விவசாய நிலத்திற்கு பட்டா கேட்டு பெரம்பலூர் கலெக்டர் அலுவலகம் முற்றுகை
Published on

பெரம்பலூர்,

பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் (பொறுப்பு) அழகிரிசாமி தலைமை தாங்கி, பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை வாங்கினார். இந்த நிலையில் வேப்பந்தட்டை தாலுகா எறையூர் நரிக்குறவர் காலனியில் வசிக்கும் நரிக்குறவர் இன மக்கள் கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்தனர்.

பின்னர் அவர்கள் தமிழ்நாடு நரிக்குறவர் கூட்டமைப்பு மாநில தலைவர் காரை சுப்பிரமணியன் தலைமையில், அதன் ஒருங்கிணைப்பாளர்கள் நம்பியார், பாபு, கணேசன் ஆகியோர் முன்னிலையில் திடீரென்று கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

அப்போது அவர்கள் கூறுகையில், எறையூர் பகுதியில் 100-க்கும் மேற்பட்ட நறிக்குறவர் மக்கள் குடும்பத்துடன் வசித்து வருகிறோம். கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு அரசு சார்பில் ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் எறையூர் அரசு சர்க்கரை ஆலையின் அருகே சுமார் 1 ஏக்கர் முதல் 4 ஏக்கர் நிலம் வழங்கப்பட்டது. தற்போது அதில் விவசாயம் செய்து வருகிறோம். மேற்படி அந்த நிலத்திற்கு பட்டா கேட்டு 1983-ல் இருந்து போராடி வருகிறோம். இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பெரம்பலூர் மாவட்டத்தில் ஜவுளி பூங்கா அமைப்பதற்கான இடத்திற்காக எங்கள் நிலத்தை அரசு தேர்வு செய்ய நினைத்தது. அப்போதும் நாங்கள் போராடி ஜவுளி பூங்கா அமைக்க விடாமல் தடுத்து விட்டோம்.

தற்போது அரசு அதிகாரிகள் சிலர் நாங்கள் அந்தப்பகுதியில் விவசாயம் செய்யவில்லை என அரசுக்கு தவறான தகவல்கள் கொடுத்து வருவதாக தெரிகிறது. எனவே நரிக்குறவர் விவசாயம் செய்யும் நிலத்திற்கு உடனடியாக பட்டா வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினர். இதையடுத்து அவர்கள் கலெக்டரை சந்தித்து இது தொடர்பாக மனு கொடுத்துவிட்டு கலைந்து சென்றனர்.

இதேபோல் பெரம்பலூர் மாவட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட நாட்டுப்புற கிராமிய மரபு சார்ந்த கலைஞர்கள் நாடகம், தெருக்கூத்து உள்ளிட்டவை நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர். அவர்களில் சிலர் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து மனு கொடுத்தனர். அதில், நாட்டுப்புற கிராமிய கலைஞர்களுக்கு அரசு வழங்கும் நலவாரிய அட்டையும், அடையாள அட்டையும் பெறுவதற்கு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.

வேப்பந்தட்டை தாலுகா தேவையூர் ஊராட்சி ரஞ்சன்குடி கிராம மக்கள் கொடுத்த மனுவில், எங்கள் கிராமத்தின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் ஊர் பொதுக்குளத்தையும், அதற்கு தண்ணீர் வரும் பாதையையும் தூர்வார வேண்டும் என்று கூறியிருந்தனர்.

குன்னம் தாலுகா சின்ன வெண்மணி கிராம பொதுமக்கள் சார்பில் பெரிய வெண்மணி கிராமத்தை சேர்ந்த வரதராஜன் என்பவர் கொடுத்த மனுவில், சின்ன வெண்மணி கிராமத்தில் பழுதான நிலையில் உள்ள பெண்களுக்காக கழிப்பிடத்தை சீரமைத்து, பயன்பாட்டிற்கு கொண்டு வர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். நடவடிக்கை எடுக்காவிட்டால் மக்களை திரட்டி போராட்டம் நடத்துவேன் என கூறியிருந்தார்.

மேலும் பொதுமக்களிடம் இருந்து முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, பட்டா மாற்றம், தொழில் தொடங்க கடனுதவி, வேலைவாய்ப்பு, வீட்டுமனைப்பட்டா உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மொத்தம் 231 மனுக்களை பெற்று கொண்ட கலெக்டர் அழகிரிசாமி சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம், கொடுத்து அந்த மனுக்கள் மீது உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். இதையடுத்து கலெக்டர் அழகிரிசாமி ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் மூலம் 3-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை பயிலும் மாணவிகளுக்கு இடைநிற்றல் இன்றி பயில 2018-19-ம் கல்வியாண்டில் பெண் கல்வி ஊக்குவிப்பு உதவித்தொகைகளை வழங்கினார்.

மேலும் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் முகாமில் மாற்றுத்திறனாளிகளிடம் இருந்து மொத்தம் 21 மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர் அழகிரிசாமி 4 மாற்றுத்திறனாளிகளுக்கு 3 சக்கர சைக்கிள்களையும், ஒரு மாற்றுத்திறனாளிக்கு காதொலி கருவியும் வழங்கினார்.

இதேபோல் அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்திற்கு மாவட்ட வருவாய் அதிகாரி தனசேகரன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து பல்வேறு கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது. இதில் கீழப்பழுவூர் மக்கள் கொடுத்த மனுவில், திருச்சி- சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கப்பணிக்காக அரசு எங்களது நிலங்களை கையகப்படுத்தியது. அதில் கீழப்பழுவூர் பகுதியில் சுமார் 80 நபர்களின் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டன. அதற்காக நில உரிமையாளர்களுக்கு அரசு சார்பில் வழங்கப்படும் தொகை மிகவும் குறைவாக உள்ளது. அதனை கூடுதலாக வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com