வங்கிகளில் பெற்ற விவசாய கடன்களை பாரபட்சமின்றி தள்ளுபடி செய்ய வேண்டும்

வங்கிகளில் விவசாயிகள் பெற்ற விவசாய கடன்களை பாரபட்சமின்றி தள்ளுபடி செய்ய வேண்டும் என்று குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினார்கள்.
வங்கிகளில் பெற்ற விவசாய கடன்களை பாரபட்சமின்றி தள்ளுபடி செய்ய வேண்டும்
Published on

தர்மபுரி,

தர்மபுரி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் தர்மபுரி கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு உதவி கலெக்டர் சிவன்அருள் தலைமை தாங்கினார். அனைத்து துறை அதிகாரிகள் முன்னிலை வகித்தனர். இந்த கூட்டத்தில் விவசாயிகள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசியதாவது:-

கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வினாடிக்கு 2 லட்சத்து 40 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்தது. சுமார் 100 டி.எம்.சி. தண்ணீர் பயன்பாடின்றி வீணாக கடலில் கலந்துள்ளது. அதேசமயத்தில் காவிரி ஆறு தமிழகத்தில் நுழையும் தர்மபுரி மாவட்டத்தில் விவசாயத்திற்கு ஆற்று நீரை பயன்படுத்த முடியாத சூழ்நிலை உள்ளது. எனவே தமிழக அரசு காவிரி ஆற்றின் உபரிநீரை நீரேற்றம் செய்து தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஏரிகள், குளங்களில் நிரப்பவும், அதன்மூலம் நிலத்தடி நீர் உயர்வதற்கான வாய்ப்பை ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழக முதல்-அமைச்சர் அறிவித்த என்ணேகொல்புதூர் நீர்பாசன திட்டம், தூள்செட்டி ஏரி நீர்பாசன திட்டம் ஆகியவற்றிக்கு உரிய நிதி ஒதுக்கீடு செய்து அவற்றை செயல்படுத்த வேண்டும். தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற கடனை சிறுவிவசாயி, பெரிய விவசாயி என்ற பாரபட்சமின்றி தள்ளுபடி செய்ய வேண்டும். மரவள்ளி கிழங்கு சாகுபடி மற்றும் விலை நிர்ணயம் தொடர்பான முத்தரப்பு கூட்டத்தை உடனடியாக நடத்த வேண்டும். இவ்வாறு விவசாயிகள் பேசினார்கள்.

இந்த கூட்டத்தில் நிலக்கடலை சாகுபடி செய்த விவசாயிகள் வறட்சி உள்ளிட்ட காரணிகளால் சரியாக விளையாமல் சேதமடைந்த நிலக்கடலை செடிகளை குறைதீர்க்கும் கூட்டத்திற்கு கொண்டு வந்து அதிகாரிகளின் பார்வைக்கு வைத்தனர். நிலக்கடலை உள்ளிட்ட பல்வேறு பயிர்களுக்கு காப்பீடு செய்வதற்கான காலஅவகாசத்தை நீட்டிக்க வேண்டும்.

சேதமடைந்த நிலக்கடலை பயிர்களுக்கு உரிய இழப்பீட்டு தொகை வழங்க வேண்டும் என்று அப்போது வலியுறுத்தினார்கள். கூட்டத்தில் உதவி கலெக்டர் சிவன்அருள் பேசுகையில், தர்மபுரி மாவட்டத்தில் நீர்பாசன திட்டங்களை நிறைவேற்றுவது தொடர்பாக விவசாயிகள் வைத்த கோரிக்கைகள் மாவட்ட கலெக்டர் மூலம் அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும். கரும்பு சாகுபடி செய்த விவசாயிகளுக்கு சோகைகளை வெட்ட அளிக்கப்படும் தொகை முழுமையாக விவசாயிகளை சென்றடைய தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.

இந்த கூட்டத்தில் விவசாயிகளின் கோரிக்கைகள் தொடர்பாக விவசாய சங்க பிரதிநிதிகள் பேசி கொண்டிருந்தனர். அப்போது விவாதத்தை விரைவாக முடித்து விட்டு விவசாயிகளின் கோரிக்கைகள் தொடர்பான மனுக்களை கூட்டத்தில் படித்து தீர்வுகளை வழங்க வேண்டும் என்று பல விவசாயிகள் வலியுறுத்தினார்கள். இதனால் கூட்ட அரங்கில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது. கூட்டத்தில் பேரீட்சை பழ சாகுபடியில் சிறப்பாக செயல்பட்ட கிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்த விவசாயிக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com