விமான நிலைய விரிவாக்க பணி; கலெக்டர் ரோகிணி நேரில் ஆய்வு

ஓமலூர் காமலாபுரத்தில் விமான நிலைய விரிவாக்க பணிக்கான நிலங்களை கலெக்டர் ரோகிணி நேரில் ஆய்வு செய்தார்.
விமான நிலைய விரிவாக்க பணி; கலெக்டர் ரோகிணி நேரில் ஆய்வு
Published on

ஓமலூர்,

சேலம் மாவட்டம் ஓமலூரை அடுத்த காமலாபுரம், பொட்டியபுரம், சிக்கனம்பட்டி, தும்பிபாடி ஆகிய ஊராட்சிகளுக்கு உட்பட்ட இடத்தில் சேலம் விமான நிலையம் அமைந்துள்ளது. இந்த நிலையில் சேலம் விமான நிலையம் சுமார் 570 ஏக்கர் பரப்பளவில் விரிவாக்கம் செய்யப்படுகிறது. விரிவாக்கம் செய்யப்படும் நிலத்தில் பட்டா நிலம் 534.5 ஏக்கரும், அரசு புறம்போக்கு நிலம் 35.5 ஏக்கரும் உள்ளன.

விரிவாக்க பணிக்கு தேவையான நிலத்தினை எடுக்க மாவட்ட நிர்வாகம் அளவீடு செய்யும் பணியில் ஈடுபட்டு வருகிறது. இதனிடையே, விமான நிலையம் விரிவாக்க பணிக்கு அந்த பகுதி மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். இதற்கிடையில், அரசு புறம்போக்கு இடத்தில் வீடு கட்டி வசிப்பவர்களுக்கும், விவசாயம் செய்பவர்களுக்கும் வருவாய் துறை சார்பில் 3 முறை விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

கலெக்டர் ஆய்வு

இந்தநிலையில் நேற்று முன்தினம் காமலாபுரம் விமான நிலைய அலுவலகத்தில் விமான நிலைய உதவி பொது மேலாளர் சித்தநாதன் மற்றும் அதிகாரிகளுடன் சேலம் மாவட்ட கலெக்டர் ரோகிணி ஆலோசனை நடத்தினார். இதைத்தொடர்ந்து காமலாபுரம் மற்றும் சிக்கனம்பட்டி ஊராட்சியில் விமான நிலையம் விரிவாக்க பணிக்காக கையகப்படுத்த உள்ள அரசு புறம்போக்கு நிலத்தை ஆய்வு செய்தார். இந்த நிலத்தில் தற்போது வீடுகள் உள்ளன. மேலும் விவசாயமும் செய்யப்பட்டு வருகிறது. இதனால் அந்த இடங்களில் வசித்து வருபவர்களுக்கு மாற்று இடம் வழங்குவது குறித்தும் அதிகாரிகளுடன் கலெக்டர் ரோகிணி ஆலோசனை நடத்தினார். இந்த ஆய்வின் போது ஓமலூர் தாசில்தார் சித்ரா, மண்டல துணை தாசில்தார் செந்தில்குமார். வருவாய் ஆய்வாளர் லலிதாஞ்சலி உள்பட பலர் உடன் இருந்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com