

வில்லியனூர்
வில்லியனூரை அடுத்த கரிக்கலாம்பாக்கம் கிராமத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி கிளை சார்பில் பகத்சிங் படிப்பக கட்டிட திறப்பு விழா நடைபெற்றது. விழாவுக்கு தமிழக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் மற்றும் புதுவை மாநில சமூக நலத்துறை அமைச்சர் கந்தசாமி ஆகியோர் படிப்பக கட்டிடத்தை ரிப்பன் வெட்டி திறந்துவைத்தனர். அப்போது ஜி.ராமகிருஷ்ணன் பேசியதாவது:-
மாணவர்கள் குறைவாக உள்ள அரசு பள்ளிகளை மூட தமிழக அரசு முடிவு செய்திருப்பது தவறானது. இதனால் கிராமப்புற ஏழை மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள். கம்யூனிஸ்டு கட்சி இதனை வன்மையாக கண்டிக்கிறது. புதுவை மாநில கவர்னர் கிரண்பெடி ஐ.பி.எஸ். அதிகாரியாக இருந்தபோது, நேர்மையாக செயல்பட்டார். ஆனால் அவர் கவர்னராக பொறுப்பேற்றது முதல் வரம்பு மீறி செயல்பட்டு வருகிறார். புதுவையில் ஆளும் அரசான காங்கிரஸ் இருக்கும்போது, அதிகாரத்தை பயன்படுத்தி பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்களை நியமித்தது தவறான செயல்.
மத்திய பா.ஜ.க. அரசு நான்கு ஆண்டுகள் கடந்து வந்த நிலையில் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பு ஆக்குவதாக வாக்குறுதி அளித்தது. அதில் எந்த முன்னேற்றமும் ஏற்பட்டதாக தெரியவில்லை. மாறாக விவசாயிகள் தற்கொலைதான் அதிகமானது. காங்கிரஸ் கட்சியுடன் சேர்ந்து பா.ஜ.க. இல்லாத அரசியல் நிலை உருவாவதற்கு அனைத்து கட்சிகள் இணைய வேண்டும்.
இவ்வாறு ஜி.ராமகிருஷ்ணன் பேசினார்.