ம.தி.மு.க.-காங்கிரஸ் கருத்து மோதலால் கூட்டணிக்கு பாதிப்பில்லை - தொல்.திருமாவளவன் பேட்டி

“ம.தி.மு.க.-காங்கிரஸ் இடையே எழுந்த கருத்து மோதலால் கூட்டணிக்கு பாதிப்பில்லை” என தொல்.திருமாவளவன் கூறினார்.
ம.தி.மு.க.-காங்கிரஸ் கருத்து மோதலால் கூட்டணிக்கு பாதிப்பில்லை - தொல்.திருமாவளவன் பேட்டி
Published on

மதுரை,

மதுரை விமான நிலையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி. நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

மழை வெள்ளத்தால் நீலகிரி மாவட்டம் கடுமையாக பாதிக்கப்பட்டு, பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. அங்கு எத்தனை பேர் உயிரிழந்தார்கள் என்று கூட தெரியாத அளவுக்கு சேதம் நிகழ்ந்துள்ளது. இந்தநிலையில் மத்திய, மாநில அரசுகள் தீவிரமான நடவடிக்கையில் இறங்கி, போர்க்கால அடிப்படையில் மீட்பு பணிகளையும், மறுவாழ்வு பணிகளையும் மேற்கொள்ள வேண்டும்.

இதுபோல், கடும் மழையால் கேரளா, மராட்டிய மாநிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. எனவே, மத்திய அரசு பாதிக்கப்பட்ட பகுதிகளை எல்லாம் பேரிடரால் பாதிக்கப்பட்ட பகுதி என்று அறிவித்து, உரிய இழப்பீடு வழங்க வேண்டும்.

ம.தி.மு.க.-காங்கிரஸ் கட்சிகளுக்கிடையே எழுந்துள்ள கருத்து மோதல் தற்காலிகமானது. இது எந்த வகையிலும் கூட்டணியை பாதிக்காது என்று நம்புகிறேன்.

காஷ்மீர் மக்களுக்கு இழைக்கப்பட்டுள்ள துரோகம் ஒரு வரலாற்று துரோகமாகும். இதை கண்டித்து விரைவில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் சென்னையில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிட்டு இருக்கிறோம். தேதி விரைவில் அறிவிக்கப்படும். இந்த விவகாரத்தில் தி.மு.க. தலைமையிலான கூட்டணி கட்சிகள் எடுக்கும் போராட்ட களத்தில் விடுதலை சிறுத்தைகள் கைகோர்த்து நிற்கும்.

ரஜினிகாந்த், பாரதீய ஜனதா கட்சிக்கு ஆதரவாக பேசுகிறார் என்பதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. அவர் மோடி அரசை விமர்சிப்பார், எதிர்த்து பேசுவார் என்று எதிர்பார்ப்பது நம்முடைய எதிர்பார்ப்பு. ஆனால் அவர் தொடக்க காலத்திலிருந்தே பா.ஜனதா அரசுக்கு எதிராக எந்த கருத்தையும் முன்வைக்கவில்லை. இப்போதும் அப்படித்தான் பேசியிருக்கிறார். எனவே இதில் அதிர்ச்சி அடைவதற்கு ஒன்றுமில்லை.

வேலூரில் அ.தி.மு.க. தோல்வி அடைந்ததற்கு பா.ஜ.க.வுடன் இருக்கும் உறவு தான் காரணம் என்று உணர்ந்து இருந்தாலும்கூட பா.ஜ.க. உறவை அவர்களால் தவிர்க்க முடியவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com