

கன்னியாகுமரி,
விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்தவர் ராமர் (வயது 34), கட்டிட தொழிலாளி. இவர் கன்னியாகுமரியில் உள்ள சுனாமி காலனியில் தனது 2வது மனைவியுடன் வசித்து வந்தார்.
இந்தநிலையில் அவர் 10ம் வகுப்பு படிக்கும் 17 வயது மாணவியை கடத்திச் சென்றதாக கூறப்படுகிறது. மாணவியை காணாமல் பெற்றோர் பதற்றம் அடைந்தனர். மேலும் பல இடங்களில் தேடி பார்த்தும் அவரை பற்றி எந்த தகவலும் இல்லை. மகள் மாயமானதில் இருந்து ராமரையும் காணாததால், அவர் தான் கடத்தி சென்றிருக்கலாம் என்று பெற்றோருக்கு சந்தேகம் ஏற்பட்டது.
அதன்படி மாணவியின் பெற்றோர் கன்னியாகுமரி அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்தநிலையில் மாணவியை கடத்திய ராமரை கைது செய்தனர். அந்த மாணவியும் மீட்கப்பட்டார். ஏற்கனவே 2 பெண்களை மணந்த ராமர், ஆசை வார்த்தை கூறி மாணவியை கடத்தியதாக கைது செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.