மேலும் ஒரு வடமாநில வாலிபரை பொதுமக்கள் பிடித்து அடி-உதை

அரக்கோணம் ரெயில் நிலையத்தில் சந்தேகப்படும்படி சுற்றித்திரிந்த வடமாநில வாலிபரை பொதுமக்கள் பிடித்து தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர்.
மேலும் ஒரு வடமாநில வாலிபரை பொதுமக்கள் பிடித்து அடி-உதை
Published on

அரக்கோணம்,

அரக்கோணத்தில் இருந்து காட்பாடிக்கு பாசஞ்சர் ரெயில் சென்று கொண்டிருந்தது. ரெயில் அன்வர்திகான்பேட்டை ரெயில் நிலையத்தில் நின்ற போது சுமார் 32 வயது மதிக்கத்தக்க வடமாநில வாலிபர் ஒருவர் இறங்கினார். அவர் ரெயில் நிலையத்தில் சுற்றி வந்து உள்ளார். பின்னர் அன்வர்திகான்பேட்டை பஜார் பகுதியில் சுற்றி உள்ளார். இதைப் பார்த்து சந்தேகமடைந்த அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அந்த வாலிபரை பிடித்து அடித்து உதைத்து விசாரித்து உள்ளனர்.

இது குறித்து அரக்கோணம் தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இன்ஸ்பெக்டர் அண்ணாத்துரை சம்பவ இடத்திற்கு போலீசாரை அனுப்பி வாலிபரை மீட்டு விசாரணை நடத்தியபோது அவர் இந்தியில் பேசினார். இந்தி மொழி தெரிந்தவர் மூலம் நடத்திய விசாரணையில் பிடிபட்டவர் பெயர் அஜய் என்பதும், பீகார் மாநிலம் பகல்பூர் பகுதியை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது.

சென்னை, வியாசர்பாடி பகுதியில் வேலைபார்த்து வந்த இவர் அங்கிருந்து மும்பை செல்வதற்காக ரெயில் நிலையத்துக்கு சென்றுள்ளார். ஆனால் மும்பை ரெயிலில் ஏறுவதற்கு பதிலாக காட்பாடிக்கு செல்லும் ரெயிலில் ஏறிவிட்டார். ரெயில் அரக்கோணத்தை கடந்து அன்வர்திகான்பேட்டை ரெயில் நிலையம் அருகே சென்ற போது வேறு ரெயிலில் மாறி ஏறியதை உணர்ந்த அவர் ரெயில் நின்றதும் அதிலிருந்து இறங்கி அரக்கோணம் ரெயில் நிலையத்துக்கு வந்துள்ளார்.

மும்பை செல்லும் ரெயில் வருவதை எதிர்நோக்கி காத்திருந்த அவர் ரெயில் வருவதற்கு தாமதமாகும் என்ற நிலையில் பஜார் பகுதிக்கு சென்றுள்ளார். அப்போது அவரது நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த பொதுமக்கள் அஜய்யை பிடித்து தாக்கியது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

இந்த நிலையில் அவர் கூறியது உண்மை என தெரியவந்ததையடுத்து அவரை போலீசார் விடுவித்தனர். பின்னர் அவர் அரக்கோணம் ரெயில் நிலையத்துக்கு சென்று அங்கு வந்த மும்பை ரெயிலில் ஏறி புறப்பட்டார்.

கடந்த 2 தினங்களுக்கு முன்பு இதேபோல் அரக்கோணம் கிருபில்ஸ்பேட்டை பகுதியில் சந்தேகப்படும்படி சுற்றித்திரிந்த வடமாநில வாலிபர் ஒருவரை பொதுமக்கள் பிடித்து சுற்றிவளைத்து தாக்கினர். போலீசார் மீட்டு நடத்திய விசாரணையில் அவர் பீகார் மாநிலத்தைசேர்ந்தவர் என்பதும் அவரது பெயர் மாறனஸ்தா என்பதும் தெரியவந்தது. அவர் திருட முயன்றபோது சிக்கியதால் போலீசார் அவரை கைது செய்திருந்தனர். இந்த நிலையில் மேலும் ஒரு வடமாநில வாலிபரை பொதுமக்கள் சந்தேகத்தின்பேரில் பிடித்து அடித்து உதைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com