அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனம் வெந்தபுண்ணில் வேல் பாய்ச்சுவது போல் உள்ளது - அருண்மொழிதேவன் எம்.பி.

காவிரிநீர் பிரச்சினை உள்ள நிலையில் அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனம் வெந்தபுண்ணில் வேல் பாய்ச்சுவது போல் உள்ளது என்று அருண்மொழிதேவன் எம்.பி. கூறியுள்ளார்.
அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனம் வெந்தபுண்ணில் வேல் பாய்ச்சுவது போல் உள்ளது - அருண்மொழிதேவன் எம்.பி.
Published on

திட்டக்குடி,

கடலூர் நாடாளுமன்ற உறுப்பினர் அருண்மொழிதேவன் திட்டக்குடியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட வேண்டும் என்பது தமிழ்நாட்டு மக்களின் உணர்வாக உள்ளது. உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் மத்திய அரசு இதற்கு விளக்கம் கேட்டு காலதாமதம் செய்கிறது. காவிரி விவகாரம் தொடர்பாக நாடாளுமன்ற கூட்டத்தொடரை அ.தி.மு.க. உறுப்பினர்கள் முடக்கி தமிழக மக்களின் உணர்வை வெளிப்படுத்தி உள்ளனர். தமிழக அரசும் உரிய சட்ட நடவடிக்கை எடுத்து வருகிறது.

தமிழக முதல்-அமைச்சர், துணை முதல்-அமைச்சர் உள்பட லட்சக்கணக்கான அ.தி.மு.க. தொண்டர்கள் உண்ணாவிரதம் இருந்து கண்டனத்தை வெளிப்படுத்தி உள்ளோம். காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைத்திருக்கும் தி.மு.க. காவிரி பிரச்சினைக்கு தீர்வு காண எந்த முயற்சியும் செய்யாமல் போராடுவது போல் ஒரு நாடகத்தை நடத்தி வருகின்றனர்.

தி.மு.க. கூட்டணி கட்சியினர் காங்கிரஸ் தலைமையிலான கர்நாடக அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். ஆனால் அதற்கான முயற்சி எதுவும் செய்யாமல் மக்களை ஏமாற்றி வருகின்றனர். தமிழ்நாட்டின் மிக முக்கியமான பல்கலைக்கழகமான அண்ணா பல்கலைக்கழகத்திற்கு கர்நாடகாவை சேர்ந்த சூரப்பாவை துணை வேந்தராக நியமித்து கவர்னர் உத்தரவிட்டுள்ளார். இந்த நியமனத்தை பொறுத்தவரை தமிழக அரசுக்கும், உயர் கல்வி துறைக்கும் எந்த தொடர்பும் இல்லை.

விண்ணப்பித்திருந்த நூற்றுக்கணக்கான நபர்களில் தமிழர் ஒருவருக்கு கூட தகுதியில்லை என்ற நிலைப்பாட்டை தமிழக கவர்னர் எடுத்து கர்நாடகாவை சேர்ந்த ஒருவரை நியமித்துள்ளார். காவிரி பிரச்சினை உள்ள இந்த சூழ்நிலையில் கர்நாடகாவை சேர்ந்த ஒருவரை பல்கலைக்கழக துணை வேந்தராக கவர்னர் நியமித்து இருப்பது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல இருக்கிறது. இதை மறு பரிசீலனை செய்து துணை வேந்தராக தமிழர் ஒருவரை நியமிக்க வேண்டும். தமிழர்களின் உணர்வுகளை மதித்து கவர்னர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அருண்மொழிதேவன் எம்.பி. கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com