

தேனி:
தேனி அல்லிநகரம் நகராட்சி அலுவலகத்திற்கு, தேனி லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸ் துணை சூப்பிரண்டு கருப்பையா தலைமையில், இன்ஸ்பெக்டர் ஜெயப்பிரியா மற்றும் போலீசார் நேற்று மாலை 4 மணி அளவில் திடீரென்று வந்தனர். அலுவலகத்துக்குள் நுழைந்தவுடன் அலுவலக நுழைவு வாயிலை லஞ்ச ஒழிப்பு போலீசார் இழுத்துப் பூட்டினர். பின்னர் நகராட்சி அலுவலகத்தில் சோதனையை தொடங்கினர். அலுவலகத்தில் உள்ள ஒவ்வொரு அலுவலர் அறையையும் சோதனையிட்டனர். சோதனை நடந்துகொண்டிருந்தபோது, நகராட்சி ஆணையாளர் சுப்பையா அங்கு வந்தார். அவரையும் அலுவலகத்துக்குள் அழைத்துச் சென்று போலீசார் விசாரணை நடத்தினர்.
நகராட்சி ஆணையாளர், சுகாதார அலுவலர், மேலாளர், நில அளவையர் உள்பட பலரிடமும் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தினர். இரவு 10 மணிக்கு பிறகும் இந்த சோதனை தொடர்ந்தது. லஞ்ச ஒழிப்பு துறைக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் இந்த சோதனை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. சோதனை முடிவடைய நள்ளிரவு ஆகும் என்றும், சோதனை முடிவில் தான் கணக்கில் வராத பணம் இருக்கிறதா? என தெரியவரும் என்றும் லஞ்ச ஒழிப்பு போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. லஞ்ச ஒழிப்பு போலீசாரின் இந்த சோதனை தேனியில் பரபரப்பை ஏற்படுத்தியது.