சத்துணவு அமைப்பாளர் நியமனத்துக்கு எதிர்ப்பு அங்கன்வாடி கட்டிடத்தை பூட்டி போராட்டம்

திருச்சிற்றம்பலம் அருகே சத்துணவு அமைப்பாளர் நியமனத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ஊராட்சி அலுவலகம், அங்கன்வாடி கட்டிடத்தை பூட்டி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் பள்ளி முன்பு வேலி அமைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
சத்துணவு அமைப்பாளர் நியமனத்துக்கு எதிர்ப்பு அங்கன்வாடி கட்டிடத்தை பூட்டி போராட்டம்
Published on

திருச்சிற்றம்பலம்,

தஞ்சை மாவட்டம் திருச்சிற்றம்பலம் அருகே கல்லூரணிக்காடு ஊராட்சி உள்ளது. இங்கு ஆதிதிராவிடர் நல தொடக்கப்பள்ளி மற்றும் உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. பள்ளி அமைந்துள்ள இடம், அங்கன்வாடிமையம், ஊராட்சி அலுவலகம் அமைந்துள்ள இடங்கள் ஆகியவற்றை கல்லூரணிக்காடு கிராமத்தை சேர்ந்த ஒரு தரப்பினர் அரசுக்கு தானமாக வழங்கியதாக கூறப்படுகிறது. கல்லூரணிக்காடு அரசு உயர்நிலைப்பள்ளியில் காலியாக இருந்த சத்துணவு அமைப்பாளர் பணியை நிலம் தானமாக வழங்கிய தரப்பினரின் குடும்பத்தை சேர்ந்த ஒருவருக்கு வழங்கும்படி அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்தநிலையில், இதே ஊரை சேர்ந்த மற்றொரு நபருக்கு சத்துணவு அமைப்பாளர் பணி நியமன ஆணை வழங்கப்பட்டதாக தெரிகிறது.

இதனால் வேலை கிடைக்காத தரப்பினருக்கு ஆதரவாக கல்லூரணிக்காடு கிராமத்தை சேர்ந்த ஒரு பகுதி மக்கள், ஊராட்சி அலுவலகம், அங்கன்வாடி மையம் ஆகியவற்றை இழுத்து பூட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் அரசு தொடக்கப்பள்ளி மற்றும் உயர்நிலைப்பள்ளி ஆகியவற்றுக்கு முன்பாக உள்ள நிலத்தின் உரிமையாளர்கள் தங்களது இடத்தை சுற்றி கம்புகளால் வேலி அமைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் பள்ளிக்கு செல்ல முடியாமல் மாணவர்களும் ஆசிரியர்களும் அவதிப்பட்டனர். இதைத்தொடர்ந்து வருவாய்த்துறை அதிகாரிகளும், பேராவூரணி ஒன்றிய ஆணையர் சித்ரா ஆகியோர் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு வேலி அமைத்தவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்படவில்லை. இதனால் திருச்சிற்றம்பலம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com