ஆண்டிக்கொட்டாய் கிராமத்தில் காளைவிடும் விழாவில் மாடுகள் முட்டியதில் 20 பேர் காயம்

ஆண்டிக்கொட்டாய் கிராமத்தில் நடந்த காளைவிடும் திருவிழாவில் மாடுகள் முட்டியதில் 20 பேர் காயமடைந்தனர். கீழே விழுந்ததில் 3 காளைகளுக்கும் காயம் ஏற்பட்டது.
ஆண்டிக்கொட்டாய் கிராமத்தில் காளைவிடும் விழாவில் மாடுகள் முட்டியதில் 20 பேர் காயம்
Published on

அணைக்கட்டு,

அணைக்கட்டு தாலுகா ஆண்டிக்கொட்டாய் கிராமத்தில் காளைவிடும் திருவிழா நேற்று நடந்தது. உதவி ஆணையர் (கலால்) பூங்கொடி, அணைக்கட்டு தாசில்தார் ஹெலன்ராணி, மண்டல துணை தாசில்தார் பன்னீர்செல்வம் ஆகியோர் கொடியசைத்து காளைவிடும் திருவிழாவை தொடங்கி வைத்தனர்.

இதில் வாணியம்பாடி, கிருஷ்ணகிரி, காட்பாடி, பரதராமி, ஒடுகத்தூர் மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் இருந்து 215 காளைகள் கொண்டுவரப்பட்டிருந்தன. காளைவிடும் திருவிழாவை பார்ப்பதற்காக ஆயிரக்கணக்கான பொதுமக்கள், இளைஞர்கள் திரண்டிருந்தனர். அவர்கள் அங்குள்ள கோவில் மீதும், வீட்டு மாடிகள் மீதும் அமர்ந்திருந்தனர். காளைகளை கால்நடைத்துறை டாக்டர்கள் சுந்தரமூர்த்தி மற்றும் சுமித்ரா ஆகியோர் பரிசோதித்து அனுமதி வழங்கினர்.

காளைகள் ஓடவிடப்பட்டதும் பொதுமக்கள் ஆரவாரமிட்டனர். அப்போது இளைஞர்களின் ஆரவாரத்தில் தெருவில் ஓடிய சில காளைகள் குறுக்கும் நெடுக்குமாக ஓடின. அப்போது வேடிக்கை பார்த்து கொண்டிருந்தவர்களை காளைகள் முட்டியதில் 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அவர்களுக்கு அங்கு முகாமிட்டிருந்த டாக்டர் வினோத் மற்றும் சுகாதார குழுவினர் முதலுதவி சிகிச்சை அளித்தனர். இதில் 2 பேர் மேல் சிகிச்சைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

காளைகள் வேகமாக ஓடியபோது நிலைதடுமாறி கீழே விழுந்ததில் 3 காளைகள் படுகாயமடைந்தன. அந்த காளைகளுக்கு கால்நடை மருத்துவர்கள் சிகிச்சையளித்தனர். குறிப்பிட்ட தூரத்தை குறுகிய நேரத்தில் கடந்த காளையின் உரிமையாளருக்கு முதல் பரிசாக ரூ.50 ஆயிரம், 2-வது பரிசாக ரூ.30 ஆயிரம் உள்பட 31 பரிசுகள் வழங்கப்பட்டன.

ஆம்பூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சச்சிதானந்தம் தலைமையில், இன்ஸ்பெக்டர்கள் கோவிந்தசாமி, சரவணன் மற்றும் 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

ஏற்பாடுகளை இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com