ஸ்ரீரங்கம் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட கணேசனிடம் மீண்டும் 6 நாள் விசாரிக்க போலீசாருக்கு அனுமதி

ஸ்ரீரங்கம் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட கணேசனிடம் மீண்டும் 6 நாள் விசாரிக்க போலீசாருக்கு கோர்ட்டு அனுமதி வழங்கி உள்ளது. மேலும், 3 கிலோ தங்க நகைகளும் பறிமுதல் செய்யப்பட்டது.
ஸ்ரீரங்கம் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட கணேசனிடம் மீண்டும் 6 நாள் விசாரிக்க போலீசாருக்கு அனுமதி
Published on

சமயபுரம்,

திருச்சி லலிதா ஜூவல்லரி நகைக்கடையில் கடந்த 2-ந் தேதி அதிகாலை ரூ.12 கோடியே 31 லட்சம் மதிப்புள்ள 28 கிலோ தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. இந்த கொள்ளை சம்பவத்தில் திருவாரூரை சேர்ந்த பிரபல கொள்ளையன் முருகன், சுரேஷ், மதுரையை சேர்ந்த கணேசன் உள்ளிட்டோர் ஈடுபட்டது தெரியவந்தது. போலீசார் அவர்களை தேடி வந்த நிலையில், முருகன் பெங்களூரு கோர்ட்டிலும், சுரேஷ் செங்கம் கோர்ட்டிலும் சரண் அடைந்தனர். முருகனை பெங்களூரு போலீசார் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதையடுத்து திருச்சி தனிப்படை போலீசார் கோர்ட்டு உத்தரவை பெற்று, சுரேசை திருச்சிக்கு அழைத்து வந்து மத்திய சிறையில் அடைத்தனர். மேலும், இந்த கொள்ளை வழக்கில் மதுரை மாவட்டம் வாடிப்பட்டியை சேர்ந்த கணேசனுக்கு தொடர்பு இருந்தது தெரியவந்தது. கணேசனை கடந்த 13-ந் தேதி போலீசார் கைது செய்தனர். அப்போது அவரது வீட்டின் அருகே பதுக்கி வைத்து இருந்த 6 கிலோ 100 கிராம் எடை கொண்ட தங்க நகைகளை பறிமுதல் செய்தனர். இந்த நகைகள் அனைத்தும் லலிதா ஜூவல்லரியில் கொள்ளையடிக்கப்பட்டது என தெரியவந்தது.

3 கிலோ நகைகள் பறிமுதல்

தொடர் விசாரணையில் திருச்சி நெ.1 டோல்கேட் அருகே பஞ்சாப் நேஷனல் வங்கியில் கடந்த ஜனவரி மாதம் 470 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.19 லட்சம் கொள்ளை போன வழக்கிலும் திருவாரூர் முருகன் தலைமையிலான கொள்ளை கும்பலுக்கு தொடர்பு இருந்தது தெரியவந்தது. இதையடுத்து சமயபுரம் போலீசார் பஞ்சாப் நேஷனல் வங்கி கொள்ளை தொடர்பாக கணேசனை கடந்த 18-ந் தேதி முதல் 7 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரித்தனர். விசாரணையில் கணேசன், மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகேயுள்ள மேட்டுப்பட்டி மலையடிவாரத்தில் 3 கிலோ தங்க நகைகளை மண்ணில் புதைத்து வைத்து இருந்தது தெரியவந்தது. அந்த நகைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

பறிமுதல் செய்யப்பட்ட நகைகளை சோதித்து பார்த்தபோது, அதில் 1 கிலோ தங்க நகைகள் லலிதா ஜூவல்லரியில் கொள்ளையடிக்கப்பட்டது என்பதும், மேலும் 1 கிலோ நகைகள் பஞ்சாப் நேஷனல் வங்கியில் கொள்ளையடிக்கப்பட்டது என்பதும் தெரியவந்தது. இதையடுத்து 3 கிலோ தங்க நகைகளையும் போலீசார் மீட்டு வந்து கோர்ட்டில் ஒப்படைத்தனர். இதற்கிடையே கணேசனுக்கு நேற்றுடன் 7 நாள் போலீஸ் காவலில் விசாரணை முடிந்தது. இதையடுத்து அவரை நேற்று காலை சமயபுரம் போலீசார் ஸ்ரீரங்கம் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.

மீண்டும் 6 நாள் போலீஸ் காவல்

அப்போது கணேசனிடம் மீண்டும் 7 நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி கோரி கோர்ட்டில் சமயபுரம் போலீசார் மனுத்தாக்கல் செய்தனர். மனுவை விசாரித்த மாஜிஸ்திரேட்டு சிவகாம சுந்தரி, 6 நாள் விசாரணை நடத்த அனுமதி வழங்கினார். இதையடுத்து கணேசனை ரகசிய இடத்துக்கு அழைத்து சென்று மீண்டும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இதற்கிடையே பஞ்சாப் நேஷனல் வங்கி கொள்ளை சம்பவம் தொடர்பாக மற்றொரு குற்றவாளியான முருகனின் அக்காள் மகன் சுரேசையும் 7 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து சமயபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். சுரேசிடம் விசாரணை நடத்தப்படும் பட்சத்தில் பஞ்சாப் நேஷனல் வங்கி கொள்ளையில் மேலும் பல்வேறு தகவல்கள் தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com