

அரியலூர்,
அரியலூர் மாவட்ட கலெக்டர் லட்சுமிபிரியா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்ப தாவது:-
அரியலூர் மாவட்டத்தில் பாரத பிரதமரின் அனைவருக்கும் வீடுகட்டும் திட்டத்தின்கீழ் தமிழ்நாடு குடிசைப் பகுதி மாற்று வாரியத்தின் மூலம் அரியலூர் மற்றும் ஜெயங்கொண்டம் நகராட்சிக்கு உட்பட்ட ஆட்சேபகரமான நிலங்களில் வசிக்கும் மக்கள் தாங்களாகவே வீடு கட்டிக்கொள்ளும் திட்டம் மற்றும் வீடற்றோர்களுக்கான வீடு கட்டும் திட்டம் ஆகிய திட்டங்கள் மூலம் விண்ணப்பித்து பயன்பெறலாம்.
மக்கள் தாங்களாகவே வீடு கட்டிகொள்ளும் திட்டத்தின்படி சொந்தமாக மனை வைத்திருப்போர் பயன் பெறலாம். இத்திட்டத்தில் அரசு மானியமாக ரூ.2 லட்சத்து 10 ஆயிரம் வழங்கப்படும். இத்திட்டத்தில் பயன்பெறுபவர்கள் ஏற்கனவே உள்ள குடிசை, ஓடு, ஆஸ்பெஸ்டாஸ் உள்ளிட்ட வீடுகளை மாற்றி சுமார் 300 முதல் 400 சதுர அடி அளவுள்ள கான்கிரீட் வீடுகளாக கட்டி கொள்ளலாம்.
மேலும், நகராட்சி எல்லைக்குட்பட்ட வீடற்றோர் களுக்கான திட்டத்தின்படி நகராட்சியில் சொந்த வீடு இல்லாத மக்கள், வாரியத்தின் மூலம் கட்டப்படும் அடுக்குமாடி குடியிருப்புகளில் வீடு பெற்றுக்கொள்ளலாம். இத்திட்டத்திற்கு அரசு மானியம் போக மீதமுள்ள தொகையை பயனாளிகள் செலுத்த வேண்டும். இத்திட்டத்தில் கட்டப்படும் வீடுகள் சுமார் 400 சதுர அடி கொண்டதாகவும் வரவேற்பறை, படுக்கை அறை, சமையல் அறை, குளியல் அறை மற்றும் கழிப்பறை வசதியுடனும், தண்ணீர் மற்றும் மின்சார வசதியுடனும் செய்து தரப்படும்.
மேலும், இவ்விரண்டு திட்டங்களுக்கும் பயனாளிகளின் மாத வருமானம் ரூ.25 ஆயிரத்திற்குள் இருக்க வேண்டும். மேலும் வட்டி மானியத்துடன் கூடிய திட்டத்தின்படி பயன்பெற விரும்புவோர் சுமார் 600 முதல் 700 சதுர அடி வரை வீடுகள் கட்டிக்கொள்ளலாம். இத்திட்டத்தில் ரூ.6 லட்சத்திற்கு வட்டி மானியமாக வழங்கப்படும். இத்திட்டங்களில் பயன்பெற விரும்புபவர்கள் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாளிலும், நகராட்சி மற்றும் குடிசை பகுதி மாற்று வாரியத்திலும் நேரடியாக சென்று விண்ணப்பித்து பயன்பெறலாம். இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.