

கோபால்பட்டி,
நத்தம் சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க.வேட்பாளராக போட்டியிடும் முன்னாள் அமைச்சரும், திண்டுக்கல் அ.தி.மு.க. கிழக்கு மாவட்ட செயலாளருமான நத்தம் விசுவநாதனை ஆதரித்து நடிகை விந்தியா நேற்று மாலை கோபால்பட்டி மற்றும் நத்தத்தில் திறந்த வெளி ஜீப்பில் பிரசாரத்தில் ஈடுபட்டார் அப்போது அவர் பேசியதாவது:-
எனக்கு முகவரி தந்த மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா வழியில் அனைத்து துறை நிர்வாகத் திலும் நல்லாட்சி நடத்தி வருபவர் தமிழக முதல் -அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அர்ச்சுனனுக்கு கிருஷ்ணர் போல எதிரி களை அழிக்க அவருக்கு உறுதுணையாக துணை முதல்-அமைச்சர் பன்னீர் செல்வம் செயல்படுகிறார். முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன் எனது தந்தையை போன்றவர் அவருடைய அரசியல் அனுபவம் எனது வயது. அவருக்கு வாக்கு கேட்பது எனக்கு பெருமை.
ஜெயலலிதாவின் அமைச் சரவை யில் நத்தம்விசுவநாதன் முக்கிய பங்காற்றியவர் கடனில் இருந்த மின்வாரி யத்தை மீட்டு , மின்வெட்டு பிரச்சனையை தீர்த்து மின்மிகை மாநிலமாக மாற்றிய சாதனையாளர். இவருக்கு வாக்களித்தால் நத்தம் தொகுதி மட்டுமல்ல தமிழகமே நன்றாக இருக்கும்.
தி.மு.க.வினர் 10 வருடங்களாக ஆட்சியில் இல்லை கமிசன் அடித்தே பழகிய வர்கள் காசு, பணம், மணி,மணி என வாழ்ந்தவர்கள்.வராத மழைக்கு வானிலை அறிக்கை கூறுவது போல வராத ஆட்சிக்கு வாக்குறுதிகளை அள்ளி வீசுகின்றனர்.மீண்டும் ஆட்சியை பிடிக்க பல வேஷங்களை கட்டி ஆடுகின்றனர்.
கிராமசபை கூட்டம், விடியலை நோக்கி, ஸ்டாலினின் குரல் என பல வேஷங்களை போடுகின்றனர் ஆனால் அதில் எதுவும் போனியாக வில்லை. தி.மு.க.வினரை நம்ப வேண்டாம். இதுவரை இருந்த ஆட்சி காலத்தில் கச்சத்தீவு, மீனவர், இலங்கை பிரச்சினை, பெண்கள், மாணவர்கள், நதி நீர் என எந்த பிரச்சனையையும் தீர்க்காதவர்கள் இப்போது 100 நாளில் எப்படி தீர்ப்பார்கள்.
மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா 2011 ல் கொடுத்த லேப்டாப், தாலிக்கு தங்கம்,மிக்சி, கிரைண்டர், மின்விசிறி, என அனைத்து தேர்தல் வாக்குறுதிகளையும் நிறைவேற்றினார்.அதை போல் இப்போது வாசிங் மெசின், பெண்கள் உதவித் தொகை, அரசு வேலை வாய்ப்பு, 6 சிலிண்டர், சோலார் அடுப்பு , என அனைத்து வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படும் முதல் -அமைச்சர் பழனிசாமி கொரோனா காலத்தில் ரேஷனில் அரிசி பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள், ரொக்கம், பொங்கல் பரிசு தொகுப்பு, பயிர்கடன் தள்ளுபடி, நகைகடன் தள்ளுபடி என மக்களுக்கு தேவையான நேரத்தில் தேவையான நலத்திட்டங்களை செய்து வருகிறார்.
தி.மு.க.வினர் 6 உதிரி கட்சிகளை சேர்த்து கொண்டு எதிர்க்கிறார்கள் அவர்கள் 100 கட்சிகளை சேர்த்தாலும் அ.தி.மு.க.வை வெல்ல முடியாது.ஆண்டவனை எதிர்க்க சக்தியில்லை அ.தி.மு.க.வை வெற்றி பெற கட்சி இல்லை. மீண்டும் கழக வெற்றி விழாவில் சந்திப்போம் என நடிகை விந்தியா பேசினார்.