சம்பள உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ‘ஆஷா’ திட்ட ஊழியர்கள் பிரமாண்ட பேரணி - பெங்களூருவில் போக்குவரத்து நெரிசல்

பெங்களூருவில் சம்பள உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ‘ஆஷா’ திட்ட ஊழியர்கள் பிரமாண்ட பேரணி நடத்தினர். இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
சம்பள உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ‘ஆஷா’ திட்ட ஊழியர்கள் பிரமாண்ட பேரணி - பெங்களூருவில் போக்குவரத்து நெரிசல்
Published on

பெங்களூரு,

ஆஷா திட்ட ஊழியர்கள் ஆயிரக்கணக்கானோர் நேற்று தங்களுக்கு மாத சம்பளம் ரூ.12 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும், நிலுவையில் உள்ள சம்பள பாக்கியை உடனே வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சிட்டி ரெயில் நிலையத்தில் இருந்து சுதந்திர பூங்கா வரை பிரமாண்ட பேரணியாக சென்றனர்.

இதையடுத்து அவர்கள் சுதந்திர பூங்காவின் முன்பு உள்ள சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் தங்களுடைய கோரிக்கையை நிறைவேற்றாத மாநில அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். மேலும் அவர்கள் கோரிக்கையை நிறைவேற்றும் வரை பகல்-இரவு போராட்டமாக இதுதொடரும் என்று அறிவித்தனர்.

இதையடுத்து போராட்டக்காரர்களுடன் சுகாதார துறை, குடும்பநல துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர்கள் தங்களுடைய கோரிக்கைகள் அனைத்தும் பரிசீலிக்கப்பட்டு மாநில அரசிற்கு தெரிவிக்கப்படும் என கூறினர்.

இதற்கிடையே மாநில சுகாதார மந்திரி ஸ்ரீராமுலு நிருபர்களிடம் கூறியதாவது:-

ஆஷா திட்ட ஊழியர்களின் கோரிக்கைகள் விரைவில் நிறைவேற்றப்படும். இதுகுறித்து அதிகாரிகள், முதல்-மந்திரியுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும், ஆஷா திட்ட ஊழியர்கள் சங்கத்தின் நிர்வாகிகளுடன் கலந்து ஆலோசித்து முடிவு எட்டப்படும். போராட்டக்காரர்கள் 10 கோரிக்கைகள் நிறைவேற்ற கோரியுள்ளனர். அவற்றில் 7 கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டு உள்ளன. எனவே போராட்டங்களை கைவிட்டுவிட்டு ஆஷா திட்ட ஊழியர்கள் பணிக்கு திரும்ப வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இதுபற்றி ஆஷா திட்ட ஊழியர்கள் சங்கத்தின் தலைவி நாகலட்சுமி கூறுகையில், தங்களுடைய கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக சுகாதார மந்திரி ஸ்ரீராமுலு தெரிவித்துள்ளார். எனவே பகல்-இரவு போராட்டத்தை கைவிட்டுவிட்டு வீட்டிற்கு செல்லுகிறோம். தங்களுடைய கோரிக்கைகளை மாநில அரசு நிறவேற்றும் வரை போராட்டம் நடத்துவோம் என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com