உளுந்துக்கு கூடுதல் விலை கேட்டு விவசாயிகள் சாலை மறியல் -உளுந்தூர்பேட்டையில் பரபரப்பு

உளுந்தூர்பேட்டையில் உளுந்துக்கு கூடுதல் விலை கேட்டு விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
உளுந்துக்கு கூடுதல் விலை கேட்டு விவசாயிகள் சாலை மறியல் -உளுந்தூர்பேட்டையில் பரபரப்பு
Published on

உளுந்தூர்பேட்டை,

உளுந்தூர்பேட்டையில் சென்னை சாலையில் வேளாண் ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் உள்ளது. இந்த விற்பனைக்கூடத்துக்கு உளுந்தூர்பேட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் தங்களது விளை நிலங்களில் அறுவடை செய்த நெல், உளுந்து உள்ளிட்ட பல்வேறு தானியங்களை விற்பனைக்காக கொண்டு வருவார்கள். அவ்வாறு விவசாயிகள் கொண்டு வரும் தானியங்களுக்கு விற்பனைக்கூட அதிகாரிகள் மூலம் விலை நிர்ணயம் செய்யப்பட்டு, கொள்முதல் செய்யப்படும். அதன்படி விவசாயிகள் நேற்று முன்தினம் தலா 100 கிலோ எடைகொண்ட உளுந்து மூட்டைகளை விற்பனைக்கு கொண்டு வந்தனர். அப்போது உளுந்து ஒரு மூட்டை அதிகபட்சமாக ரூ.5,400-க்கு கொள்முதல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் நேற்று காலை விவசாயிகள் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உளுந்து மூட்டைகளை விற்பனைக்காக ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்துக்கு வாகனங்களில் கொண்டு வந்தனர். அப்போது அதிகாரிகள் நேற்று உளுந்து ஒரு மூட்டை அதிகபட்சமாக ரூ.5,200-க்கும், குறைந்த பட்சமாக ரூ.5,100-க்கும் விலை நிர்ணயம் செய்ததாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள் உளுந்துக்கு கூடுதல் விலை நிர்ணயம் செய்ய கேட்டு ஒழுங்குமுறை விற்பனைக்கூட அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இருப்பினும் விலை உயர்த்தி வழங்கப்படவில்லை. இதனால் மேலும் ஆத்திரமடைந்த விவசாயிகள் ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் முன்பு உளுந்தூர்பேட்டை-சென்னை சாலையில் திரண்டு மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதுபற்றி தகவல் அறிந்த உளுந்தூர்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செல்வநாயகம் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்ட விவசாயிகளிடம் போக்குவரத்துக்கும், பொதுமக்களுக்கும் இடையூறு ஏற்படுத்தக்கூடாது என்றும், உங்களது கோரிக்கை குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி தீர்வுகாணவேண்டும் என்றும் அறிவுரை கூறினர். இதனை ஏற்ற விவசாயிகள் மறியலை கைவிட்டு, உளுந்துக்கு நேற்று முன்தினம் நிர்ணயம் செய்யப்பட்ட தொகையையே, இன்றும் கொள்முதல் செய்யவேண்டும் என்று கண்டன கோஷங்கள் எழுப்பியபடி ஒழுங்குமுறை விற்பனைக்கூட அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அதற்கு அதிகாரிகள் மறுப்பு தெரிவித்தனர்.

இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள் 2-வது முறையாக மீண்டும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுபற்றி தகவல் அறிந்த உளுந்தூர்பேட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜேந்திரன் தலைமையிலான போலீசார் மற்றும் உளுந்தூர்பேட்டை தாசில்தார் இளங்கோவன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, மறியலில் ஈடுபட்ட விவசாயிகளிடம் உளுந்துக்கு விலை உயர்த்தி வழங்குவது குறித்து மாவட்ட அதிகாரிகள் கவனத்துக்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதனை ஏற்ற விவசாயிகள் மறியலை கைவிட்டு, அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com