இலவச வீட்டுமனை கேட்டு கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்ட தொழிலாளர்கள்

இலவச வீட்டுமனை கேட்டு கலெக்டர் அலுவலகத்தை செங்கல் சூளை தொழிலாளர்கள் முற்றுகையிட்டனர்.
இலவச வீட்டுமனை கேட்டு கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்ட தொழிலாளர்கள்
Published on

கோவை,

கோவை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில், 8 மணி நேர வேலைக்கான தொழிலாளர்கள் இயக்க தலைவர் திருமொழி தலைமையில், கோவை காளப்பநாயக்கன் பாளையத்தில் உள்ள செங்கல் சூளையில் பணியாற்றி வரும் தொழிலாளர்கள் குடும்பத்துடன் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இதனால் அங்கு சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.

பின்னர் அவர்கள் கலெக்டரிடம் அளித்த மனுவில், காளப்பநாயக்கன்பாளையம் பகுதியில் உள்ள செங்கல் சூளையில் வேலை பார்த்து, பல ஆண்டுகளாக அங்கேயே குடிசைகள் அமைத்து தங்கி உள்ளோம். எங்களுக்கு சொந்தமாக வீடு இல்லாததால் நாங்கள் அவதியடைந்து வருகிறோம். இதனால் குழந்தைகளின் கல்வி பாதிக்கப்படுகிறது. இதுகுறித்து பலமுறை அதிகாரிகளிடம் மனு அளித்து நடவடிக்கை எடுக்க வில்லை. எனவே இலவச வீட்டுமனை வழங்க வேண்டும், என்று கூறப்பட்டு இருந்தது.

கோவை தெற்கு உக்கடம் சி.எம்.சி. காலனியை சேர்ந்த பொதுமக்கள் அளித்த மனுவில், உக்கடத்தில் இருந்து ஆத்துபாலம் வரை தற்போது புதிய மேம்பாலம் அமைக்கப்படுகிறது. இதற்காக சி.எம்.சி. காலனியை சேர்ந்த பொதுமக்களின் வீடுகளை காலிசெய்ய வேண்டும் என்று கோவை கோட்ட நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் உத்தரவிட்டு உள்ளனர். நாங்கள் வேறு இடத்துக்கு செல்ல வழியில்லை. எனவே நீண்டநாள் கோரிக்கையான இந்த பகுதியிலேயே குடிசை மாற்று வாரியத்தின் மூலம் வீடு கட்டி தருவதுடன், பட்டாவும் வழங்க வேண்டும் என்று கூறி உள்ளனர்.

கற்பி சமூக கல்வி மைய செயலாளர் நடராஜன் தலைமையில், கம்மாளபட்டி கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் அளித்த மனுவில், கோவை மாவட்டம் சுல்தான்பேட்டை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கம்மாளபட்டி கிராமம் மஜாரா வரப்பாளையத்தில் 150-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. நாங்கள் இந்த பகுதியில் 15 ஆண்டுகளுக்கும் மேலாக குடியிருந்து வருகிறோம்.

இங்கு எங்களுக்கு வீடு மற்றும் இலவச வீட்டு மனை பட்டா எதுவும் கிடையாது. இதனால் எங்களுக்கு இலவச கழிப்பிடம் மற்றும் தொகுப்பு வீடு போன்ற எந்தவித அரசு சலுகைகளும் கிடைப்பதில்லை. எனவே எங்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கவேண்டும், என்று கூறி இருந்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com