வீட்டு மனை பட்டா கேட்டு, கலெக்டர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை

வீட்டு மனை பட்டா கேட்டு கலெக்டர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.
வீட்டு மனை பட்டா கேட்டு, கலெக்டர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை
Published on

கோவை,

கோவை மாவட்ட பொதுமக்களின் குறைதீர்க்கும் வகையில் திங்கட்கிழமை தோறும் கூட்டம் கோவை கலெக்டர் அலுவலகத்தில் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி நேற்று பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு கலெக்டர் ராஜாமணி தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றார்.

இதில் மாவட்டத்தில் உள்ள ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு தங்கள் கோரிக்கையை மனுவாக எழுதி கலெக்டரிடம் கொடுத்தனர். பின்னர் அந்த மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.

கோவை சின்ன தடாகம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அளித்த மனுவில் கூறப்பட்டு உள்ளதாவது:-

கோவையை அடுத்த சின்ன தடாகம், வீரபாண்டி, சோமையம்பாளையம் மற்றும் பன்னிமடை பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதிகளில் ஏராளமான செங்கல் சூளைகள் கடந்த 20 ஆண்டுகளாக உள்ளன. இதற்காக அரசு நிலத்தில் அனுமதியின்றி 50 முதல் 60 அடி ஆழம் தோண்டி மண் எடுக்கின்றனர். இதனால் கனிமவளம் சூறையாடப்படுகிறது.

மேலும் செங்கல் உற்பத்திக்காக ஆழ்துளை கிணறு அமைத்து தண்ணீர் எடுப்பதால் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து பொதுமக்களுக்கு தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படுகிறது. இந்த கனிமவள கொள்ளை குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மனு அளித்தும் கண்டுகொள்ளவில்லை. எனவே கனிம வளத்தை கொள்ளையடிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

கோவை மலுமிச்சம்பட்டியை சேர்ந்த தனியார் நர்சரி மற்றும் பிரைமரி பள்ளி தாளாளர் வளர்மதி அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-

எனது பள்ளியில் எல்.கே.ஜி. முதல் 5-ம் வகுப்பு வரை 70 மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். பள்ளிக்கு கடந்த 2005 முதல் 2020 வரை அங்கீகாரம் உள்ளது. கடந்த 16-ந் தேதி பள்ளி முடிந்து மாணவ-மாணவிகள் வீட்டுக்கு சென்றனர். இந்த நிலையில் அன்று இரவு பொக்லைன் எந்திரம் மூலம் எனது பள்ளியை சிலர் இடித்து தரைமட்டமாக்கினர்.

மேலும் எனக்கு கொலை மிரட்டலும் வருகிறது. இதுகுறித்து செட்டிபாளையம் போலீசில் புகார் அளித்தேன். ஆனால் அதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. பள்ளி கட்டிடம் இடிக்கப்பட்டதால் மாணவ- மாணவிகளின் கல்வி பாதிக் கும். எனவே பள்ளி கட்டிடத்தை இடித்தவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுத்து, எனக்கு அவர்களிடம் இருந்து இழப்பீட்டு தொகை வாங்கி தரவேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

ஆதித்தமிழர் முன்னேற்ற கழக மாவட்ட செயலாளர் இனியவன் தலைமையில் பொதுமக்கள் அளித்த மனுவில், கோவையை அடுத்த சூலூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட கண்ணம்பாளையம், அம்பேத்கர் நகர், காமராஜர் நகர், இருகூர் பேரூராட்சிக்கு உட்பட்ட காமாட்சிபுரம், நொய்யல் காலனி உள்ளிட்ட பகுதிகளில் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் 90 ஆண்டுகளுக்கும் மேலாக குடியிருந்து வருகின்றனர்.

இவர்களுக்கு செலக்கரசல், சித்தநாயக்கன்பாளையம் ஆகிய பகுதிகளில் வீட்டு மனை பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தது.

இதேகோரிக்கையை வலியுறுத்தி சமூக நீதி கட்சியின் தலைவர் பன்னீர் செல்வம் தலைமையில் மனு அளிக்க வந்த பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. சிறிது நேரத்தில் அவர்கள் கலெக்டர் அலுவகத்தில் மனுவை அளித்துவிட்டு, அங்கிருந்து கலைந்து சென்றனர்.

அவர்கள் அளித்த மனுவில், கோவை மாவட்டத்தில் மொத்தம் 4,000 ஏக்கர் அரசுக்கு சொந்தமான நிலம் இருப்பதாக தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் தெரிகிறது. அன்னூர், மேட்டுப்பாளையம், சூலூர், காரமடை உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்கள் சொந்த இடம் இன்றி தவித்து வருகின்றனர்.

இவர்களின் உண்மை தன்மையை ஆராய்ந்து வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும் என்று அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com