ஆர்.எஸ்.மங்கலம் யூனியன் அலுவலகம் முன்பு குடிநீர் கேட்டு கிராம மக்கள் சாலை மறியல்

குடிநீர் கேட்டு நாகனேந்தல் கிராம மக்கள் ஆர்.எஸ்.மங்கலம் யூனியன் அலுவலகம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களை அதிகாரிகள் சமரசம் செய்தனர்.
ஆர்.எஸ்.மங்கலம் யூனியன் அலுவலகம் முன்பு குடிநீர் கேட்டு கிராம மக்கள் சாலை மறியல்
Published on

ஆர்.எஸ்.மங்கலம்,

ஆர்.எஸ்.மங்கலம் யூனியனுக்கு உட்பட்டது நாகனேந்தல் கிராமம். இந்த கிராமத்திற்கு காவிரி கூட்டுக்குடிநீர் வருவதில்லை என்றும், தெருக்கள் மற்றும் வயல்வெளிகளில் மின் கம்பிகள் மிகவும் தாழ்வாக செல்வதாகவும், ஆர்.எஸ்.மங்கலத்தில் இருந்து அத்தானூர், காவனுர், நாகனேந்தல் வழியாக மீண்டும் பஸ் இயக்க வலியுறுத்தியும் அப்பகுதி மக்கள் தொடர்ந்து நீண்டகாலமாக அதிகாரிகளுக்கும், மாவட்ட நிர்வாகத்துக்கு கோரிக்கை விடுத்துவந்தனர்.

ஆனால் இதுபற்றி எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால் விரக்திஅடைந்த கிராம மக்கள் நேற்று காலை 11.30 மணி அளவில் ஆர்.எஸ்.மங்கலம் யூனியன் அலுவலகம் முன்பாக தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்ததும் ஆர்.எஸ்.மங்கலம் மண்டல அலுவலர் கணேசன் தலைமையில் வட்டார வளர்ச்சி அலுவலர் பச்சமால், போலீஸ் துணை சூப்பிரண்டு விஜயகுமார், திருப்பாலைக்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராணிமுத்து, குடிநீர் வடிகால் வாரிய உதவி பொறியாளர் தினேஷ்குமார் ஆகியோர் முன்னிலையில் அதிகாரிகள் கிராம மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி சமரசம் செய்தனர்.

அப்போது இந்த கோரிக்கைகளை மாவட்ட நிர்வாகத்தின் கவனத்துக்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதி அளித்ததை தொடர்ந்து கிராம மக்கள் கலைந்துசென்றனர். இந்த திடீர் சாலை மறியலால் சுமார் மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com