

அன்னவாசல்,
புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் ஒன்றியம் இருந்திரப்பட்டி ஊராட்சியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழக அரசின் புயல் நிவாரண பொருட்கள் வழங்குவதற்காக டோக்கன் வழங்கப்பட்டு, நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது. அப்போது புயலால் பாதிப்பு அடையாத பெரும்பாலான குடும்பங்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டுள்ளதாவும், ஆகவே, வருவாய்த் துறையினர் முறையாக கணக்கெடுத்து நிவாரண பொருட்கள் வழங்க வேண்டும் எனக்கூறி இலுப்பூர்-திருச்சி சாலையில் பொதுமக்கள் நேற்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த இலுப்பூர் போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இதில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதேபோல காவேரிநகர் ரெயில்வே கேட் அருகே பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் வெள்ளனூர் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி சமரசம் செய்து அனுப்பி வைத்தனர்.
இதேபோல அன்னவாசல் அருகே உள்ள பெருஞ்சுனையில் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசின் நிவாரணம் முறையாக கிடைக்கவில்லை எனக்கூறி புதுக்கோட்டை-விராலிமலை சாலையில் பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர். இதனால், அந்த பகுதியில் பள்ளி, கல்லூரி வாகனங்கள் உள்பட அனைத்து வாகனங்களும் இருபுறமும் அணிவகுத்து நின்றன.
இதனால் மாணவ, மாணவிகள் உள்பட பலர் கடும் அவதி அடைந்தனர். சம்பவ இடத்துக்கு வந்த வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் திருக்கோகர்ணம் போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
அறந்தாங்கி அருகே உள்ள குளத்துர், கோங்குடி, பச்சலுர், மொட்டையாண்டி, சேவிகோட்டை ஆகிய பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் புயல் நிவாரண பொருட்களை வழங்க கோரி அறந்தாங்கி-காரைக்குடி சாலையில் உள்ள பச்சலூர் பஸ் நிறுத்தத்தில் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் அறந்தாங்கி போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.