

பவானிசாகர்,
தமிழகத்தில் மேட்டூர் அணைக்கு அடுத்தபடியாக 2-வது பெரிய அணையாக விளங்குவது பவானிசாகர் அணை. இந்த அணையின் உயரம் 105 அடியாகும்.
அணையின் மூலம் ஈரோடு, திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் உள்ள 2 லட்சத்து 50 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. இதுதவிர ஈரோடு மாவட்டத்தின் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்குகிறது.
அணைக்கு வரும் நீரின் அளவை கண்காணிப்பதற்காக அணையின் மேல் பகுதியில் தனி அறை அமைக்கப்பட்டுள்ளது.
இங்குள்ள தண்ணீர் அளவீட்டு கருவியின் மூலம் ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை அணைக்கு வரும் நீர்வரத்து பணியாளர்கள் மூலம் கணக்கெடுக்கப்படுகிறது.
அதன் விவரத்தை தொலைபேசி மூலம் பவானிசாகர் செயற்பொறியாளர் அலுவலகத்துக்கு தெரிவிப்பது நடைமுறையில் இருந்து வந்தது.
இந்தநிலையில் தற்போது உயர்அதிகாரிகள் பவானிசாகர் அணை நீர்மட்டத்தை நேரடியாக கண்காணிக்கும் வகையில் நீர்வரத்து அளவிடும் கருவி அமைந்துள்ள அறையில் தற்போது நவீன கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது.
இணையதள வசதி மூலம் நீர்வரத்து அளவிடும் கருவியில் உள்ள அளவீடுகளை பவானிசாகர் அணை கோட்ட செயற்பொறியாளர், உதவி பொறியாளர் மற்றும் அலுவலகத்தில் உள்ள கணக்கீட்டு அலுவலர் ஆகிய 3 பேர் அறிந்து கொள்ளும் வகையில் சிறப்பு வசதி செய்யப்பட்டுள்ளது.