

கடலூர் முதுநகர்,
இந்திய பெருங்கடல் மற்றும் அதனையொட்டியுள்ள தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகி இருக்கிறது. சென்னைக்கு தென்கிழக்கே சுமார் 1490 கிலோ மீட்டர் தொலைவில் நிலவி வந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியானது நேற்று காலையில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது. இது அடுத்த 24 மணி நேரத்தில் மேலும் வலுவடைந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்புள்ளது. பின்னர் புயலாக மேலும் வலுவடையவும் வாய்ப்புள்ளது.
இப்புயல் சின்னம் வட மேற்கு திசையில் வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திரா கரை நோக்கி நகரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்புயல் சின்னம் காரணமாக தமிழகத்தில் வருகிற 29 தேதி 40 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்திலும், 30-ந் தேதி 50 முதல் 70 கிலோ மீட்டர் வேகத்திலும் காற்று வீச கூடும். எனவே மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும் கடலூர் மீனவர்கள் நேற்று சிறிய ரக பைபர் படகில் கடலுக்கு சென்று மீன்பிடித்து வந்தனர்.
இந்த நிலையில் கடலூர் துறைமுகத்தில் நேற்று மதியம் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது. புயல் தூர முன்னறிவிப்பு காரணமாக இந்த கூண்டு ஏற்றப்பட்டுள்ளதாக துறைமுக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். நாளை(ஞாயிற்றுக்கிழமை) முதல் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.