வியாசர்பாடியில் தேவாலய வளாகத்தில் பாதிரியார் தூக்குப்போட்டு தற்கொலை

வியாசர்பாடியில் கிறிஸ்தவ தேவாலய வளாகத்தில் உள்ள அறையில் பாதிரியார் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வியாசர்பாடியில் தேவாலய வளாகத்தில் பாதிரியார் தூக்குப்போட்டு தற்கொலை
Published on

பெரம்பூர்,

சென்னை வியாசர்பாடி சத்தியமூர்த்தி நகர் பிரதான சாலையில் புனித அந்தோணியார் கிறிஸ்தவ தேவாலயம் உள்ளது. இந்த தேவாலயத்தில் கிளிம்டன் என்பவர் பாதிரியாராக இருந்து வருகிறார். இவருக்கு உதவியாக ஸ்ரீபெரும்புதூரை சேர்ந்த பட்டதாரியான மார்ட்டின் (வயது 37), என்பவர் உதவி பாதிரியாராக இருந்து வந்தார்.

நேற்று முன் தினம் இரவு தேவாலயத்தில் வழக்கம்போல் பிரார்த்தனை முடிந்து, அனைவரும் சென்ற பிறகு தேவாலய வளாகத்தில் உள்ள அறையில் மார்ட்டின் தூங்கச்சென்றார்.

இதையடுத்து நேற்று காலை நீண்டநேரமாகியும் மார்ட்டின் அறையை விட்டு வெளியே வராததால், சந்தேகமடைந்த கிளிம்டன் அறைக்கு சென்று பார்த்தார். நீண்ட நேரம் தட்டியும் கதவை திறக்காததால், சந்தேகமடைந்த கிளிம்டன் அறையின் கதவை உடைத்து உள்ளே சென்றார். அங்கு மார்ட்டின் தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இது குறித்து கிளிம்டன் வியாசர்பாடி போலீசுக்கு தகவல் தெரிவித்தார். தகவலறிந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அதன் பின்னர், மார்ட்டின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, மார்ட்டின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். உதவி பாதிரியார் ஒருவர் தற்கொலை செய்து கொண்டது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com