திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் பிரதமரின் படத்தை வைப்பதற்கு ஆணி-சுத்தியலுடன் வந்த - பா.ஜனதாவினர் கைது

திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் வைப்பதற்காக பிரதமரின் படம், ஆணி மற்றும் சுத்தியலுடன் வந்த பா.ஜனதாவினர் 42 பேரை போலீசார் கைது செய்தனர்.
திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் பிரதமரின் படத்தை வைப்பதற்கு ஆணி-சுத்தியலுடன் வந்த - பா.ஜனதாவினர் கைது
Published on

திண்டுக்கல்,

தமிழகத்தில் அனைத்து அரசு அலுவலகங்களிலும் பிரதமர் நரேந்திரமோடியின் படத்தை மாட்ட வேண்டும் என்று, பா.ஜனதா பட்டியல் அணியினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதற்காக அரசு அலுவலகங்களில் மனு கொடுத்தனர். அந்த வகையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் பா.ஜனதா பட்டியல் அணியினர் மனு கொடுத்துள்ளனர்.

இதேபோல் பா.ஜனதா கிழக்கு மாவட்ட தலைவர் தனபாலன் மற்றும் மாநில நிர்வாகிகளும் கலெக்டர் அலுவலகத்தில் பிரதமரின் படத்தை வைப்பதற்கு கோரிக்கை விடுத்தனர். ஆனால், அரசு உத்தரவு எதுவும் இல்லாததால் பிரதமரின் படம் இதுவரை மாட்டப்படவில்லை.

இந்த நிலையில் நேற்று பா.ஜனதா பட்டியல் அணியினர் பிரதமர் நரேந்திரமோடியின் படம், அதை மாட்டுவதற்கு ஆணி மற்றும் சுத்தியல் ஆகியவற்றை எடுத்து வந்தனர். இதையடுத்து அவர்களை, போலீசார் தடுத்து நிறுத்தினர். அதேநேரத்தில் அதிகாரிகளை சந்திக்க, முக்கிய நிர்வாகிகளை மட்டும் போலீசார் அழைத்து சென்றனர். அங்கு பிரதமரின் படத்தை தந்து விட்டு செல்லுமாறும், அரசு உத்தரவு வந்ததும் படத்தை வைப்பதாகவும் அதிகாரிகள் கூறினர்.

ஆனால் அதனை பா.ஜனதாவினர் ஏற்க மறுத்தனர். இதையடுத்து பா.ஜனதா பட்டியல் அணி மாவட்ட தலைவர்கள் மணிகண்டன், செல்வம், செயலாளர் இளையராஜா, பொருளாளர் சோனைமுத்து, பா.ஜனதா மாவட்ட துணை தலைவர் மல்லிகா உள்ளிட்ட 42 பேரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்கள் தனியார் மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டு மாலையில் விடுவிக்கப்பட்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com