நகராட்சி அலுவலகத்தில் மீன் வியாபாரிகள் நூதன போராட்டம் - போலீஸ் குவிப்பு

காரைக்குடி நகராட்சி அலுவலகத்தில் மீன் வியாபாரிகள் நூதன முறையில் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து போலீசார் குவிக்கப்பட்டனர்.
நகராட்சி அலுவலகத்தில் மீன் வியாபாரிகள் நூதன போராட்டம் - போலீஸ் குவிப்பு
Published on

காரைக்குடி,

காரைக்குடி நகர் சாலையோரங்களில் ஆங்காங்கே மீன் விற்பனை செய்யும் கடைகள் உண்டு. இதனால் சாலையோரங்களில் சுகாதார பிரச்சினை ஏற்படுவதை கருத்தில்கொண்டு நகராட்சி நிர்வாகம் சாலையோர வியாபாரிகளுக்காக ரூ.1 கோடி மதிப்பீட்டில் மீன் அங்காடி கட்டப்பட்டது. இதனை நகராட்சி நிர்வாகத்திடம் இருந்து குத்தகைக்கு எடுத்த நபர் குறிப்பிட்ட சிலரை மட்டுமே கடைகள் அமைக்க அனுமதித்தார். மற்றவர்களுக்கு அனுமதி கொடுக்கவில்லை. இதனால் சாலையோர மீன் வியாபாரிகள் இதுகுறித்து பலமுறை அதிகாரிகளிடம் புகார் செய்தனர். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் காரைக்குடி நகர மீன் வியாபாரிகள் சங்கத்தின் சார்பில் அதிகாரிகளை கண்டித்து நகராட்சி அலுவலகம் முன்பு மீன் வியாபாரிகள் சங்கம் மீன் கடை போட்டு வியாபாரம் நடத்தி நூதன போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இதற்கு அனைத்து கட்சிகளும் ஆதரவு கொடுத்தன.

அதன்படி நேற்று காலை மீன் வியாபாரிகள் சங்கத் தலைவர் பசும்பொன் மனோகரன் தலைமையில் நகராட்சி அலுவலகம் முன்பு திரண்டனர். இவர்களுக்கு ஆதரவாக நகர தி.மு.க செயலாளர் குணசேகரன், ம.தி.மு.க. நகர செயலாளர் சேது தியாகராஜன், மாவட்ட வக்கீல் பிரிவு செயலாளர் முருகானந்தம், நகர காங்கிரஸ் தலைவர் பாண்டி மெய்யப்பன், ஏ.ஐ.டி.யூ.சி. மாநில துணை செயலாளர் ராமச்சந்திரன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் சங்கு உதயகுமார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் தாலுகா செயலாளர் சின்னக்கண்ணன், அ.ம.மு.க. நகர செயலாளர் சரவணன், மக்கள் ஜனநாயக கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் சகுபர் சாதிக், மக்கள் மன்றத்தின் செயலாளர் ஆறுமுகம் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர செயலாளர் காரை பஷீர் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் பலர் கலந்து கொண்டனர்.

அவர்கள் நகராட்சி அலுவலகம் முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். திடீரென அங்கு மீன் கடைகளை போட்டு வியாபாரம் செய்ய முயன்றனர். இதனால் அங்கு பதற்றமான சூழ்நில உருவானது. அப்போது தாசில்தார் பாலாஜி, துணை போலீஸ் சூப்பிரண்டு அருண் ஆகியோர் கேட்டுக்கொண்டதன் பேரில் கடைபோடுவதை தற்காலிகமாக நிறுத்தி வைத்தனர். அதனையொட்டி அப்பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர்.

அப்போது நகராட்சி அலுவல் காரணமாக வெளியே சென்றிருந்த ஆணையாளர் சுந்தராம்பாள் அலுவலகத்திற்கு வந்தார். அவரை அதிகாரிகள் முன்னிலையில் போராட்டத்தில் ஈடுபட்டோர் சந்தித்து தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். மீன்அங்காடியில் உள்ள 48 கடைகளில் 24 கடைகளை அவர்களுக்கென ஒதுக்கீடு செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். அதற்கு பதிலளித்த நகராட்சி ஆணையாளர் கோரிக்கைகளை பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுத்து ஒரு நல்ல தீர்வு காணப்படும் என்றார். அதனை தொடர்ந்து அனைவரும் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com