சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் 18 அடி உயர ஆஞ்சநேயருக்கு 16 வகையான அபிஷேகம்

சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் உள்ள 18 அடி உயர ஆஞ்சநேயருக்கு 16 வகையான அபிஷேகம் நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் 18 அடி உயர ஆஞ்சநேயருக்கு 16 வகையான அபிஷேகம்
Published on

சுசீந்திரம்,

குமரி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலும் ஒன்று. இந்த கோவிலுக்கு தினமும் ஏராளமான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து விட்டு செல்வார்கள்.

இங்கு 18 அடி உயரமுள்ள விஸ்வரூப ஆஞ்சநேயர் சிலை உள்ளது. ஆண்டுதோறும் மார்கழி மாதம் மூலம் நட்சத்திரம் அன்று ஆஞ்சநேயர் ஜெயந்திவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம்.

16 வகையான அபிஷேகம்

அதே போல் இந்த ஆண்டுக்கான ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி நேற்று அதிகாலை 5 மணிக்கு ராமபிரானுக்கு அபிஷேகம் நடந்தது. காலை 8 மணிக்கு 18 அடி உயரமுள்ள விஸ்வரூப ஆஞ்சநேயருக்கு நல்எண்ணெய், ஆயிரக்கணக்கான லிட்டர் பால் மற்றும் தயிர், களபம், சந்தனம், குங்குமம், எலுமிச்சை சாறு, பஞ்சாமிர்தம், மாதுளைச்சாறு, தேன் உள்பட 16 வகையான சோடச அபிஷேகம் செய்யப்பட்டது. இந்த அபிஷேகத்தை காண அதிகாலையில் இருந்தே ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுசீந்திரத்தில் குவிந்தனர். கோவில் நிர்வாகம் சார்பில் அபிஷேகத்தை காண சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நண்பகல் 12 மணிக்கு விஸ்வரூப ஆஞ்சநேயருக்கு அலங்கார தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

லட்சம் லட்டு வழங்கும் நிகழ்ச்சி

மேலும் விழாவில் பங்கேற்ற பக்தர்களுக்கு பிரசாதமாக லட்டு, வடை, பஞ்சாமிர்தம், விபூதி, குங்குமம் வழங்கப்பட்டது. லட்சம் லட்டு வழங்கும் நிகழ்ச்சி மற்றும் கோவில் கலையரங்கத்தில் நடைபெற்ற அன்னதானத்தை குமரி மாவட்டத்தின் கோவில் இணை ஆணையர் அன்புமணி தொடங்கி வைத்தார். அதேபோல, எஸ்.எம்.எஸ்.எம். மேல்நிலைப்பள்ளி வளாகத்திலும் அன்னதானம் நடந்தது.

சந்தன காப்பு

இதைத்தொடர்ந்து மாலை 5 மணிக்கு விஸ்வரூப ஆஞ்சநேயருக்கு பஜனையும், 6 மணிக்கு ராமபிரானுக்கு புஷ்பாபிஷேகம், இரவு 7 மணிக்கு விஸ்வரூப ஆஞ்சநேயருக்கு சந்தன காப்பு அலங்காரத்துடன், பிச்சி, மல்லிகை, ரோஜா, தாமரை, பச்சை, கனகாம்பரம் உள்பட மலர்களால் புஷ்பாபிஷேகமும், தொடர்ந்து தீபாராதனையும் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

விழா ஏற்பாடுகள்

திருவிழா ஏற்பாடுகளை குமரி மாவட்ட திருக்கோவில் இணை ஆணையர் அன்புமணி தலைமையில் திருக்கோவில் பணியாளர்களும், பக்தர்களும் இணைந்து செய்திருந்தனர்.

ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுசீந்திரம் வந்ததால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் போக்குவரத்தை சரிசெய்யும் வகையில் போக்குவரத்து போலீசாரும், கன்னியாகுமரி போலீஸ் துணை சூப்பிரண்டு பாஸ்கரன் தலைமையில் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது. வாகனங்களை நிறுத்துவதற்கு வசதியாக கற்காடு ரோட்டில் இடம் ஒதுக்கப்பட்டிருந்தது.

சுசீந்திரம் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு குடிநீர் மற்றும் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டிருந்தது. தமிழக அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்களும் இயக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com