திருமணத்திற்கு சென்றபோது விபத்து: வேன் கவிழ்ந்து தாய்-மகள் உள்பட 3 பேர் பலி 18 பேர் படுகாயம்

திருமணத்திற்கு சென்றபோது வாய்க்காலில் வேன் கவிழ்ந்த விபத்தில் தாய்-மகள் உள்பட 3 பேர் பலியாயினர். 18 பேர் படுகாயம் அடைந்தனர்.
திருமணத்திற்கு சென்றபோது விபத்து: வேன் கவிழ்ந்து தாய்-மகள் உள்பட 3 பேர் பலி 18 பேர் படுகாயம்
Published on

தஞ்சாவூர்,

தஞ்சை புதிய பஸ் நிலையம் அருகே உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நேற்று திருமண விழா நடைபெற்றது. இந்த திருமணத்தில் பங்கேற்க தஞ்சையை அடுத்த முகமதுபந்தரில் இருந்து மணமக்களின் உறவினர்கள் 15 பெண்கள், 2 ஆண்கள், 3 குழந்தைகள் என 20 பேர், ஒரு வேனில் புறப்பட்டு சென்றனர். வேனை மேலதிருப்பூந்துருத்தியை சேர்ந்த அகமதுபாட்ஷா (வயது37) ஓட்டினார்.

அம்மன்பேட்டையில் இருந்து தஞ்சை-திருச்சி சாலையை இணைக்கும் பைபாஸ் சாலையில் வண்ணாரப்பேட்டை அருகே கல்லணைக்கால்வாய் பாலம் அருகே வேன் சென்றபோது, முன்னால் சென்ற வாகனத்தை முந்திசெல்ல டிரைவர் முயன்றார். அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை மீறி சாலையோரம் இருந்த வாய்க்காலில் கவிழ்ந்தது.

வேனில் இருந்தவர்கள் தங்களை காப்பாற்றும்படி அலறினர். இதை கேட்ட பிற வாகனங்களில் சென்றவர்கள், வாகனங்களை நிறுத்திவிட்டு வேனில் சிக்கி இருந்தவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். மேலும் வல்லம் போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரன், இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி மற்றும் போலீசாரும், தீயணைப்பு வீரர்களும் விரைந்து வந்து காயம் அடைந்தவர்களை மீட்டனர். அதில் முகமதுபந்தர் குளத்துமேட்டு தெருவை சேர்ந்த ஆட்டோ டிரைவரான சாதிக்பாட்ஷா மகள் இப்ராபேகம்(7) சம்பவ இடத்திலேயே பலியானார்.

காயம் அடைந்த அனைவரையும் 108 ஆம்புலன்ஸ் மூலம் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். செல்லும் வழியிலேயே சாதிக்பாட்ஷாவின் மனைவி நஜிமாபேகம்(35) பரிதாபமாக இறந்தார். காயம் அடைந்த நசுபுநிஷா(40), முகமதுசாயிக்(12), பரிதாபேகம்(50), பாத்திமாநிகார்(5), ரகமத்நிஷா(40), ஆயிஷா(45), அமீனாபீவி(42) மற்றும் டிரைவர் அகமதுபாட்ஷா உள்பட 19 பேரும் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

இதில் முகமதுபந்தர் ஸ்ரீராம்காலனியை சேர்ந்த முகமதுஅகீம்அலி மனைவி நூருல்பர்வீன்(22) சிகிச்சை பலனின்றி இறந்தார். மற்ற 18 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. முன்னதாக வாய்க்காலில் கவிழ்ந்த வேன், கிரேன் மூலம் மீட்கப்பட்டது. விபத்து நடந்த தகவல் அறிந்த தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் துரை.சந்திரசேகரன் எம்.எல்.ஏ. மருத்துவமனைக்கு விரைந்து சென்று காயம் அடைந்தவர்களுக்கு ஆறுதல் கூறியதுடன், உரிய சிகிச்சைகளை அளிக்கும்படி டாக்டர்களை வலியுறுத்தினார்.

விபத்தை அறிந்து மண மக்களின் உறவினர்கள், மருத்துவமனைக்கு விரைந்து வந்ததால் தீவிர சிகிச்சை பிரிவு முன்பு கூட்டம் அதிகமாக காணப்பட்டது. இதனால் மருத்துவக்கல்லூரி போலீஸ் இன்ஸ்பெக்டர் பெரியசாமி மற்றும் போலீசார் பாதுகாப்பு பணிக்காக வரவழைக்கப் பட்டனர். இந்த விபத்து குறித்து வல்லம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமண விழாவிற்கு சென்றபோது ஏற்பட்ட விபத்தில் தாய்-மகள் உள்பட 3 பேர் இறந்தது பரிதாபத்தை ஏற்படுத்தியது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com