திருப்பூர் மாநகரில் அதிகரிக்கும் சம்பவம்: காதல் வலையில் சிக்கி சீரழியும் சிறுமிகள்

திருப்பூர் மாநகர பகுதிகளில் காதல் வலையில் சிக்கி சிறுமிகள் சீரழியும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.
திருப்பூர் மாநகரில் அதிகரிக்கும் சம்பவம்: காதல் வலையில் சிக்கி சீரழியும் சிறுமிகள்
Published on

திருப்பூர்,

தொழில் நகரான திருப்பூரில் வெளி மாவட்ட மற்றும் வெளி மாநில தொழிலாளர்கள் அதிகம் பேர் வந்து பனியன் நிறுவனங்களில் தங்கி பணியாற்றி வருகிறார்கள். குறிப்பாக இளைஞர்கள், இளம்பெண்கள் தொழில் நிறுவனங்களில் பணியாற்றி வருகிறார்கள். இங்கு காதல் திருமணங்கள் அதிகம் நடந்து வருகிறது. அதிலும் 18 வயது நிரம்பாத சிறுமிகளை பள்ளிப்பருவத்தில் காதலித்து திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி இளைஞர்கள் வெளியூர் கடத்தி செல்வதும் அரங்கேறி வருகிறது.

திருப்பூர் கோல்டன் நகர் பகுதியில் உள்ள பனியன் நிறுவனத்தில் தையல் தொழிலாளியாக வேலை செய்து வந்த 24 வயது இளைஞர், அதே நிறுவனத்தில் வேலை செய்து வந்த 14 வயது சிறுமிக்கு காதல் வலை வீசியுள்ளார். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சிறுமியை அழைத்துக்கொண்டு அந்த வாலிபர் மாயமாகி விட்டார். சம்பவம் பற்றி அறிந்ததும் அந்த சிறுமியின் பெற்றோர் திருப்பூர் வடக்கு போலீஸ் நிலையத்துக்கு வந்து புகார் தெரிவித்தனர்.

போலீசார் அந்த வாலிபரின் செல்போன் எண்ணை வைத்து அவர் யார்?, யாருடன் பேசினார் என்ற விவரங்களை சேகரித்து விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் ஒரு எண்ணுக்கு அதிகமாக அவர் பேசியது தெரியவந்தது. அந்த எண்ணை தொடர்பு கொண்டபோது அது கோவை மாவட்டம் சூலூரில் உள்ள ஒரு கல்லூரியில் படிக்கும் மாணவி என்பதும், கடந்த 3 ஆண்டுகளாக மாணவியை அந்த வாலிபர் காதலித்து வந்ததும் தெரியவந்தது.

இதுபோல் அந்த வாலிபர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு 17 வயது பள்ளி மாணவி ஒருவரை காதல் வலைவீசி வெளியூர் அழைத்துச்சென்று விட்டார். அதன்பின்னர் போலீசார் அந்த வாலிபரையும், மாணவியையும் பிடித்தனர். அந்த மாணவியின் பெற்றோர் கேட்டுக்கொண்டதன் பேரில் மாணவியை பெற்றோர் தங்களுடன் அழைத்துச்சென்றனர். அப்போது அந்த வாலிபரை எச்சரித்து அனுப்பியுள்ளனர். ஆனால் அந்த வாலிபர் தான் மீண்டும், மீண்டும் இதுபோல் சிறுமிகளை சீரழித்து வந்துள்ளார். பெற்றோர் தகுந்த விழிப்புணர்வுடன் இருப்பது அவசியம். இதுபோன்ற சம்பவங்கள் தொடராமல் தடுக்க போலீசார் தகுந்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகும்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com