அத்திவரதர் தரிசனம் 17-ந் தேதி மதியம் 12 மணிக்கு நிறைவடையும் கலெக்டர் தகவல்

அத்திவரதர் தரிசனம் 17-ந் தேதி மதியம் 12 மணிக்கு நிறைவடையும் என்று கலெக்டர் பொன்னையா தெரிவித்துள்ளார்.
அத்திவரதர் தரிசனம் 17-ந் தேதி மதியம் 12 மணிக்கு நிறைவடையும் கலெக்டர் தகவல்
Published on

காஞ்சீபுரம்,

108 திவ்யதேசங்களில் ஒன்றான காஞ்சீபுரம் வரதராஜபெருமாள் கோவிலில் அத்திவரதர் கடந்த மாதம் 1-ந் தேதி முதல் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். முதல் 31 நாட்கள் சயனகோலத்தில் அருள்பாலித்த அத்திவரதர் தற்போது நின்றகோலத்தில் காட்சி தருகிறார். நேற்று அத்திவரதர் வெள்ளை மற்றும் நீல நிற பட்டாடையில் நின்ற கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். முதியோர், மாற்றுத்திறனாளிகள் அதிக அளவில் அத்திவரதரை தரிசித்தனர். அவர்களுக்கு வசதியாக சக்கர நாற்காலிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

பல்வேறு அமைப்பினர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கி வருகின்றனர். சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை, சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலை, சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலை, சென்னை- கிழக்கு கடற்கரை சாலை போன்றவற்றில் இருந்து ஏராளமான வாகனங்களில் பக்தர்கள் காஞ்சீபுரம் நோக்கி வந்தவண்ணம் இருந்தனர்.

காஞ்சீபுரம் நகரமே பக்தர்கள் கூட்டத்தால் திக்குமுக்காடியது.

காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் பொன்னையா நேற்று நிருபர்களிடம் பேசும்போது கூறியதாவது:-

காஞ்சீபுரம் வரதராஜபெருமாள் கோவிலில் அத்திவரதர் தரிசனம் வருகிற 17-ந் தேதி மதியம் 12 மணியுடன் நிறைவடைகிறது. அன்று கிழக்கு ராஜகோபுரம் மதியம் 12 மணியுடன் மூடப்படும். அதன் பின்னர் வரிசையில் காத்திருக்கும் பக்தர்கள் மட்டும் அத்திவரதரை தரிசிக்க அனுமதிக்கப்படுவார்கள். வருகிற 16-ந் தேதி காஞ்சீபுரம் நகரில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை விடப்படும்.

தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவுரையின் பேரில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் நாட்களில் நள்ளிரவு 2 மணி வரை அத்திவரதரை தரிசிக்க பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். ஆகஸ்டு 15-ந் தேதி சுதந்திர தின நாளாகும். விடுமுறை தினமான அன்று லட்சக்கணக்கான பக்தர்கள் அத்திவரதரை தரிசிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதையொட்டி அன்றையதினம் கூடுதலாக போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள்.

தற்போது 7 ஆயிரத்து 500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கூட்டம் அதிகமாக வரும் நாட்களில் 12 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள். வருகிற 16 மற்றும் 17-ந் தேதிகளில் டோனர் பாஸ் மூலம் முக்கிய நபர்கள் தரிசப்பது ரத்து செய்யப்பட்டுள்ளது. பொது தரிசனத்தில் மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com