அண்ணாநகரில் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி டிரைவர் கைது

அண்ணாநகரில் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
அண்ணாநகரில் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி டிரைவர் கைது
Published on

பூந்தமல்லி,

சென்னை அண்ணா நகர், ஏ.எல்.பிளாக், 2-வது தெருவில் உள்ள தனியார் கல்லூரி முன்பு தனியார் வங்கிக்கு சொந்தமான ஏ.டி.எம். மையம் உள்ளது. இந்த ஏ.டி.எம்.மில் கொள்ளை முயற்சி நடப்பதாக வங்கி அலுவலகத்தின் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் வந்தது. உடனடியாக இதுபற்றி அண்ணாநகர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து இரவு ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்த அண்ணாநகர் உதவி கமிஷனர் குணசேகரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அப்போது அந்த ஏ.டி.எம். மையத்தின் கண்ணாடி கதவை உடைத்த மர்மநபர், ஏ.டி.எம். எந்திரத்தை உடைக்க முயற்சி செய்துகொண்டு இருந்தார்.

உடனடியாக போலீசார், குடிபோதையில் இருந்த அந்த நபரை மடக்கிப்பிடித்து போலீஸ் நிலையம் அழைத்துச்சென்று விசாரித்தனர். அதில் அவர், சேலம் மாவட்டம் கெங்கவல்லியை சேர்ந்த சங்கர் (வயது 22) என்பதும், டிரைவரான அவர், அயனாவரத்தில் தங்கி ஒப்பந்த அடிப்படையில் சென்னை குடிநீர் வாரிய லாரியை ஓட்டி வருவதும் தெரியவந்தது.

குடிபோதையில் ஏ.டி.எம். மையத்தில் பணம் எடுக்க சென்று உள்ளார். ஆனால் பணம் வராததால் ஆத்திரத்தில் ஏ.டி.எம். மையத்தின் கண்ணாடி கதவை உடைத்ததுடன், ஏ.டி.எம். எந்திரத்தையும் உடைக்க முயற்சி செய்ததாக போலீசாரிடம் தெரிவித்தார்.

ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டதாக சங்கரை கைது செய்த போலீசார், மேலும் அவரிடம் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com