

வசாய்,
வசாய் ரெயில் நிலைய பிளாட்பாரத்தில் காதலிக்கு முத்தமிட்டதை தட்டி கேட்ட ரெயில்வே போலீஸ்காரர் மீது வாலிபர் தாக்கினார். அவரை போலீசார் கைது செய்தனர்.
முத்தம்
பால்கர் மாவட்டம் வசாய் ரெயில் நிலையத்தில் ரெயில்வே போலீஸ்காரர் சச்சின் இங்கலே என்பவர் நேற்று முன்தினம் இரவு பாதுகாப்பு பணியில் இருந்தார். 3-வது பிளாட்பாரத்தில் காதல் ஜோடி நின்று கொண்டிருந்தனர். அப்போது வாலிபர் தன்னுடன் இருந்த இளம்பெண்ணை கட்டிப்பிடித்து முத்தமிட்டு கொண்டிருந்தார். மேலும் தகாத செயலில் ஈடுபட்டதாக தெரிகிறது.
இதனை கவனித்த ரெயில்வே போலீஸ்காரர் சச்சின் இங்கலே அவர்களிடம் சென்று பொது இடத்தில் அநாகரீகமாக நடந்து கொள்வதை கண்டித்தார்.
தாக்குதல்
இதற்கு வாலிபர் எதிர்ப்பு தெரிவித்து போலீஸ்காரர் சச்சின் இங்கலேவை தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கினார். பின்னர் போலீஸ்காரர் மீது துப்பியதோடு, அவரின் சட்டை காலரை பிடித்தார். தகவல் அறிந்த மற்ற ரெயில்வே போலீசார் விரைந்து சென்று வாலிபரை மடக்கி பிடித்து கைது செய்தனர். அவரை போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர். அப்போது அந்த நபர் நாலாச்சோப்ராவை சேர்ந்த குல்தீப் திவாரி (வயது27) என தெரியவந்தது.
சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அங்கு நீதிமன்ற காவலில் ஒப்படைத்து கோர்ட்டு உத்தரவிட்டதால் அவரை சிறையில் அடைத்தனர்.