தலைமை செயலகத்தை முற்றுகையிட முயற்சி: அமைப்புசாரா தொழிலாளர்கள்-போலீசார் தள்ளுமுள்ளு

தலைமை செயலகத்தை முற்றுகையிட முயன்ற அமைப்புசாரா தொழிலாளர்களை போலீசார் தடுத்ததால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
தலைமை செயலகத்தை முற்றுகையிட முயற்சி: அமைப்புசாரா தொழிலாளர்கள்-போலீசார் தள்ளுமுள்ளு
Published on

புதுச்சேரி,

புதுவை அமைப்புசாரா தொழிலாளர்கள் தங்களுக்கு நலவாரியம், தீபாவளி பரிசுத்தொகை வழங்கக்கோரி கடந்த சில நாட்களுக்கு முன்பு முழுஅடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்தனர். இதைத்தொடர்ந்து தொழிற்சங்க நிர்வாகிகளை அழைத்து அமைச்சர் கந்தசாமி மற்றும் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

அப்போது ஜனவரி 10-ந் தேதிக்குள் நலவாரியம் அமைக்கப்படும் என்றும், தீபாவளி பண்டிகைக்கு ரூ.1000 பரிசுத்தொகை வழங்கப்படும் என்றும் அமைச்சர் கந்தசாமி உறுதியளித்தார்.

அதிருப்தி

ஆனால் பேச்சுவார்த்தையின்போது ஒப்புக்கொண்டபடி அல்லாமல் ரூ.500 மட்டுமே பரிசுத்தொகை வழங்க அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதற்கு அதிகாரிகள்தான் காரணம் என்று கூறப்படுகிறது. இதனால் அதிருப்தியடைந்த அமைப்புசாரா தொழிலாளர்கள் தலைமை செயலகத்தை முற்றுகையிடப்போவதாக அறிவித்தனர்.

இதற்காக ஆட்டோ டிரைவர்கள், வீட்டுவேலை செய்வோர் என பல்வேறு வகையான அமைப்புசாரா தொழிலாளர்கள் தலைமை செயலகம் நோக்கி நேற்று வந்தனர். ஆட்டோ, மோட்டார் சைக்கிள் என பல்வேறு வாகனங்களில் வந்த அவர்கள் தங்கள் வாகனங்களை ஆங்காங்கே நிறுத்தியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கைது செய்ய...

பிரான்சுவா மார்த்தேன் வீதி அருகே கூடிய அவர்கள் தலைமை செயலகம் நோக்கி ஊர்வலமாக புறப்பட்டனர். ஏ.ஐ.டி.யு.சி. பொதுச்செயலாளர் சேதுசெல்வம் ஊர்வலத்துக்கு தலைமை தாங்கினார்.

இதைத்தொடர்ந்து அவர்களை கைது செய்யும்விதமாக சேதுசெல்வத்தை பிடித்து போலீசார் ஜீப்பில் ஏற்றினார்கள். இதற்கு அமைப்புசாரா தொழிலாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

தள்ளுமுள்ளு

சேதுசெல்வத்தை ஏற்றிய ஜீப் முன்பு அமர்ந்து அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை குண்டுகட்டாக தூக்கி போலீசார் அங்கிருந்து அப்புறப்படுத்த முயன்றனர். அதற்கு அமைப்புசாரா தொழிலாளர்கள் எதிர்ப்பு தெரிவிக்கவே போலீசாருக்கும், அமைப்புசாரா தொழிலாளர்களுக்கும் இடையே கடுமையான தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

அப்போது சிலர் அந்த பகுதியில் நின்றிருந்த வாகனங்களை இழுத்து வந்து நடுரோட்டில் நிறுத்தினார்கள். இதில் போலீஸ் ஏட்டு கண்ணன் என்பவரின் கையில் காயம் ஏற்பட்டது.

விடுவிப்பு

சேதுசெல்வத்தை விடுவிக்கும்வரை போராட்டத்தை கைவிட மாட்டோம் என்று அமைப்புசாரா தொழிலாளர்கள் போராட்டத்தை தொடர்ந்தனர். போலீசார் வேறு வழியின்றி அவரை விடுவித்தனர்.

இதன் பின் பிரான்சுவா மார்த்தேன் வீதியில் அமர்ந்து அமைப்புசாரா தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் மாலை வரை நீடித்தது.

பேச்சுவார்த்தை

இந்த நிலையில் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரும் வகையில், சப்-கலெக்டர் சுதாகர் அங்கு வந்து அமைப்புசாரா தொழிலாளர்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினார்.

அப்போது தீபாவளி பரிசுத்தொகையாக ரூ.1000 வழங்க கோப்பு தயாராகி வருகிறது. எனவே விரைவில் ரூ.1000 வழங்கப்படும் என்று உறுதி அளித்தார். இதையடுத்து அவர்கள் போராட்டத்தினை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com