பெண் குழந்தை பெற்றோரிடம் ஒப்படைப்பு

ஆண் குழந்தைக்கு 2 பேர் உரிமை கோரிய விவகாரத்தில் அதிகாரிகள் விசாரணைக்கு பிறகு பெண் குழந்தை பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.
பெண் குழந்தை பெற்றோரிடம் ஒப்படைப்பு
Published on

கடலூர்,

விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பத்தை சேர்ந்த மகேந்திரன் மனைவி ரேகா. நிறை மாத கர்ப்பிணியான இவர் பிரசவத்துக்காக கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதே மருத்துவமனையில் குள்ளஞ்சாவடி அருகே அணுக்கம்பட்டு பெரிய காட்டுசாகையை சேர்ந்த டிரைவரான முருகன் மனைவி ஜெயமாலினியும் பிரசவத்துக்காக சேர்க்கப்பட்டார்.

இருவருக்கும் கடந்த 30-ந்தேதி இரவு குழந்தை பிறந்தது. ரேகாவுக்கு ஆண் குழந்தையும், ஜெயமாலினிக்கு பெண் குழந்தையும் பிறந்ததாக டாக்டர்கள் அறிவித்தனர். ஆனால் ஜெயமாலினியின் மாமியார் வைரம் தனது மருமகளுக்கு ஆண் குழந்தை தான் பிறந்ததாக கூறி புகார் தெரிவித்தார். இதனால் ஆண் குழந்தைக்கு 2 பேர் உரிமை கொண்டாடினர்.

இதனால் டி.என்.ஏ.பரிசோதனை செய்ய டாக்டர்கள் முடிவு செய்தனர். இதற்கிடையில் ஜெயமாலினி, அவருடைய கணவர் முருகன், மாமியார் வைரம் ஆகியோரிடம் நலப்பணிகள் இணை இயக்குனர் (பொறுப்பு) டாக்டர் ஹபீசா நேற்று விசாரணை நடத்தினார்.

விசாரணையில், ஜெய மாலினி தனக்கு பெண் குழந்தை தான் பிறந்தது. அதை டாக்டர்கள் தன்னிடம் காண்பித்ததாக கூறினார். வைரத்திடம் விசாரித்த போது, தொப்புள் கொடியுடன் குழந்தை இருந்ததால் தன்னுடைய மருமகளுக்கு ஆண் குழந்தை பிறந்து விட்டதாக நினைத்து சொல்லி விட்டேன் என்றார்.

இதையடுத்து ஜெயமாலினியும், முருகனும் தங்களுக்கு பெண் குழந்தை தான் பிறந்தது, அந்த குழந்தையை நாங்களே ஏற்றுக்கொள்கிறோம் என்று கூறி, அந்த குழந்தையை பெற்றுக்கொண்டனர். ஆண் குழந்தை ரேகாவிடம் ஒப்படைக்கப்பட்டது. இதன் மூலம் ஆண் குழந்தைக்கு 2 பேர் உரிமை கொண்டாடிய பிரச்சினை முடிவுக்கு வந்தது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com