பஸ் கட்டண உயர்வை திரும்ப பெறக்கோரி கல்லூரி மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டம்

பஸ் கட்டண உயர்வை திரும்ப பெறக்கோரி புதுக்கோட்டையில் உள்ள அரசு மகளிர் கல்லூரி மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பஸ் கட்டண உயர்வை திரும்ப பெறக்கோரி கல்லூரி மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டம்
Published on

புதுக்கோட்டை,

தமிழக அரசு கடந்த சில நாட்களுக்கு முன்பு பஸ் கட்டணத்தை உயர்த்தியது. இதை கண்டித்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மாணவ- மாணவிகள், அரசியல் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் சாலை மறியல், ஆர்ப்பாட்டம் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இந்தநிலையில் நேற்று பஸ்கட்டண உயர்வை திரும்ப பெறக்கோரி புதுக்கோட்டையில் உள்ள அரசு மகளிர் கலை கல்லூரி மாணவிகள் 200-க்கும் மேற்பட்டவர்கள் வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்த புதுக்கோட்டை டவுன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விவேக் மற்றும் போலீசார், கல்லூரி முதல்வர் உமாராணி ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது கல்லூரி முதல்வர் உமாராணி போராட்டத்தில் ஈடுபடும் அனைத்து மாணவிகளும், தங்களுக்கு வழங்கப்பட்டு உள்ள கல்லூரி அடையாள அட்டையை கழற்றி கொடுத்து விட்டு, போராட்டத்தில் ஈடுபடுங்கள் என கூறினார். இதைத்தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட மாணவிகள் போராட்டத்தை கைவிட்டு, வகுப்புகளுக்கு சென்றனர். இந்த சம்பவத்தால் நேற்று மகளிர் கல்லூரி பகுதியில் பெரும் பர பரப்பு ஏற்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com