மாவட்டத்தில் வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம் ரூ.300 கோடி பண பரிவர்த்தனை பாதிப்பு

சேலம் மாவட்டத்தில் வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் ரூ.300 கோடி பண பரிவர்த்தனை பாதிக்கப்பட்டது.
மாவட்டத்தில் வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம் ரூ.300 கோடி பண பரிவர்த்தனை பாதிப்பு
Published on

சேலம்,

பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்கக்கூடாது, வங்கி வராக்கடன்களை வசூலிக்க கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும், வங்கி கட்டணத்தை உயர்த்தி, வராக்கடன் சுமையை வாடிக்கையாளர்கள் மீது சுமத்துவதை கைவிட வேண்டும், சேமிப்பு கணக்குக்கான வட்டியை குறைக்கக்கூடாது, பொதுத்துறை வங்கிகளின் இணைப்பை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று வங்கி தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பினர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். சேலம் மாவட்டத்தில் பொதுத்துறை வங்கி, பாரத ஸ்டேட் வங்கி, பழைய தனியார் வங்கிகளில் பணிபுரியும் அதிகாரிகளும், ஊழியர்களும் இந்த ஒருநாள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வங்கி அதிகாரிகள், ஊழியர்களின் வேலைநிறுத்த போராட்டம் காரணமாக மாவட்டத்தில் உள்ள 800-க்கும் மேற்பட்ட தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள், பழைய தனியார் வங்கிகளின் பணிகள் வெகுவாக பாதிக்கப்பட்டன.

ஆர்ப்பாட்டம்

இந்த நிலையில் வங்கி ஊழியர்கள், அலுவலர்கள் நேற்று சேலம் கோட்டை பாரத ஸ்டேட் வங்கி முன்பு திரண்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்துக்கு வங்கி தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் கே.சுவாமிநாதன் தலைமை தாங்கினார்.

அகில இந்திய வங்கி ஊழியர் சங்க மாநில பொதுச்செயலாளர் சம்பத், வங்கி அதிகாரிகள் சங்க மாவட்ட பொறுப்பாளர் குணாளன், என்.சி.பி.இ. நிர்வாகி மணிகண்டன், பி.இ.எப்.ஐ. நிர்வாகி தீனதயாளன் மற்றும் சங்கர் உள்பட 500-க்கும் மேற்பட்ட ஆண், பெண் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

ரூ. 300 கோடி பரிவர்த்தனை பாதிப்பு

இதுதொடர்பாக வங்கி ஊழியர் கூட்டமைப்பின் நிர்வாகி ஒருவர் கூறுகையில், சேலம் மாவட்டத்தில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால், வங்கிகளில் ஊழியர்கள் இன்றி வெறிச்சோடியது. குறிப்பாக பண பரிவர்த்தனை வெகுவாக பாதிக்கப்பட்டது. காசோலை பரிமாற்றம் என்பது அறவே இல்லாமல் போனது. ஒருநாள் வேலைநிறுத்த போராட்டத்தால் சேலம் மாநகரம் மற்றும் புறநகர் பகுதிகளில் ரூ.300 கோடிக்கு பண பரிவர்த்தனை பாதிக்கப்பட்டது. இந்த வேலைநிறுத்தத்தில் பல தனியார் வங்கி ஊழியர்களும் பங்கேற்றனர், என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com