வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம் ரூ.400 கோடி பரிவர்த்தனை பாதிப்பு

தர்மபுரி மாவட்டத்தில் வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சுமார் ரூ.400 கோடி பரிவர்த்தனை பாதிக்கப்பட்டது.
வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம் ரூ.400 கோடி பரிவர்த்தனை பாதிப்பு
Published on

தர்மபுரி,

வங்கி ஊழியர்கள் ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு தழுவிய அளவில் நேற்று வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் ஒரு பகுதியாக தர்மபுரி மாவட்டத்தில் நடந்த வேலைநிறுத்த போராட்டத்தில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளை சேர்ந்த ஊழியர்கள், அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இந்த வேலைநிறுத்த போராட்டம் காரணமாக தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் நேற்று ஊழியர்களின்றி வெறிச்சோடின. வங்கிகளில் பணபரிவர்த்தனை, காசோலை பரிமாற்றம் உள்ளிட்ட பணிகள் பாதிக்கப்பட்டன. மாவட்டம் முழுவதும் உள்ள 215 வங்கி கிளைகளில் பணிபுரியும் 1115 ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டதால் சுமார் ரூ.400 கோடி பரிவர்த்தனை பாதிக்கப் பட்டது.

இதற்கிடையே வங்கி ஊழியர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி தர்மபுரி இந்தியன் வங்கி மண்டல அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு வங்கி அதிகாரிகள் சங்க மண்டல தலைவர் ராமவைரவன் தலைமை தாங்கினார். மண்டல செயலாளர் பிரபாகரன், வங்கி ஊழியர்கள் சங்க மாவட்ட தலைவர் தேவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு சங்கங்களை சேர்ந்த வீரமணி, ராஜேந்திரன், ராமமூர்த்தி உள்பட வங்கி ஊழியர்கள், அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இதேபோன்று தர்மபுரி ஸ்டேட் வங்கி முன்பும் வங்கி அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

வங்கி ஊழியர்களுக்கு வழங்கப்படும் பணிக்கொடை உச்சவரம்பை நீக்க வேண்டும். வங்கிகளில் புதிய பென்சன் திட்டத்திற்கு மாற்றாக பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். வங்கி ஊழியர்கள், அதிகாரிகளின் ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும். ஊதிய உயர்வு தொடர்பான பேச்சுவார்த்தையை உடனடியாக நடத்த வேண்டும். வங்கி கட்டணத்தை உயர்த்தி வராக்கடன் சுமையை வாடிக்கையாளர்கள் மீது சுமத்துவதை தவிர்க்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன.

இன்று (வியாழக்கிழமை) 2-வது நாளாக வேலைநிறுத்த போராட்டம் தொடர்ந்து நடக்கிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com