ஊழியர்கள் போராட்டத்தால் வங்கி பணிகள் முடங்கின ரூ.200 கோடி பரிவர்த்தனை பாதிப்பு

குமரி மாவட்டத்தில் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தால் பணிகள் முடங்கின. இதனால் ரூ.200 கோடி பரிவர்த்தனை பாதிக்கப்பட்டது.
ஊழியர்கள் போராட்டத்தால் வங்கி பணிகள் முடங்கின ரூ.200 கோடி பரிவர்த்தனை பாதிப்பு
Published on

நாகர்கோவில்,

பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்கக்கூடாது, வங்கிகளில் கடன் வாங்கி பின்னர் அதை திருப்பி செலுத்தாத கார்ப்பரேட் நிறுவன உரிமையாளர்கள் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். கார்ப்பரேட் நிறுவனங்கள் செலுத்தாத கடனை சர்விஸ் சார்ஜ் என்ற பெயரில் வாடிக்கையாளர்களிடம் இருந்து வசூலிக்கும் முறையை கைவிட வேண்டும், வங்கிகளில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 22ந்தேதி (நேற்று) நாடு முழுவதும் வேலை நிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கம் சார்பில் அறிவிக்கப்பட்டது.

அதன்படி நாடு முழுவதும் நேற்று வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுபோல குமரி மாவட்டத்திலும் வங்கி ஊழியர்கள் நேற்று வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் நாகர்கோவில் வடசேரியில் உள்ள ஸ்டேட் வங்கி, மீனாட்சிபுரத்தில் உள்ள இந்தியன் வங்கி, கோர்ட்டு ரோட்டில் உள்ள இந்தியன் ஓவர்சிஸ் வங்கி உள்பட மாவட்டம் முழுவதும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் உள்பட சுமார் 260 வங்கிகள் மூடப்பட்டன. இதனால் வங்கி பணிகள் முடங்கின.

இதையொட்டி வங்கி சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் நாகர்கோவிலில் கோர்ட்டு ரோட்டில் உள்ள இந்தியன் ஓவர்சிஸ் வங்கி முன் நேற்று காலை ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்துக்கு கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் சிதம்பரம் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் அகமது உசேன், சாகுல் அமீது, வஞ்சிதா உள்பட திரளானவர்கள் கலந்துகொண்டு கோஷங் களை எழுப்பினார்கள். இதனால் அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது.

இதுகுறித்து வங்கி சங்கங்களின் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் சிதம்பரத்திடம் கேட்டபோது, குமரி மாவட்டத்தில் வங்கி ஊழியர்களின் வேலை நிறுத்த போராட்டத்தால் 260 வங்கிகளில் பணியாற்றும் 1,400 ஊழியர்கள் பணிக்கு செல்லவில்லை. இதனால் ஒரே நாளில் ரூ.200 கோடி அளவில் பண பரிவர்த்தனை பாதிக்கப்பட்டு இருக்கிறது என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com