அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும்

ஊட்டியில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில், அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என்று அண்ணா நகர் மக்கள் கோரிக்கை மனு அளித்தனர்.
அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும்
Published on

ஊட்டி

ஊட்டியில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில், அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என்று அண்ணா நகர் மக்கள் கோரிக்கை மனு அளித்தனர்.

மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

ஊட்டியில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு கலெக்டர் (பொறுப்பு) கீர்த்தி பிரியதர்ஷினி தலைமை தாங்கினார். பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த பொதுமக்கள் தங்களது கோரிக்கைகளை மனுக்களாக அளித்தனர்.

இதற்காக அவர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். அவர்களிடம் இருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு ஆன்லைனில் பதிவேற்றம் செய்யப்பட்டு, ஒப்புகை சீட்டுகள் வழங்கப்பட்டது. ஊட்டி நகராட்சிக்கு உட்பட்ட அன்பு அண்ணா காலனியை சேர்ந்த பொதுமக்கள் கலெக்டரிடம் கோரிக்கை மனு கொடுத்தனர்.

மழையால் சாலை சேதம்

அந்த மனுவில், எங்கள் காலனியில் தொடர் மழையால் நடைபாதை மற்றும் குடியிருப்பை ஒட்டி மண்சரிவு ஏற்பட்டு உள்ளது. இதனால் அங்கு வசித்து வரும் பொதுமக்கள் நடந்து செல்ல வழியில்லாமல் தவித்து வருகின்றனர். மேலும் வீட்டுக்கு குடங்களில் குடிநீர் தூக்கி வருவதற்கும், இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்ய தூக்கி செல்வதற்கும் முடியாமல் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

எனவே பொதுமக்கள் நடந்து செல்வதற்கு ஏதுவாக நடைபாதை மற்றும் தடுப்புசுவரை சீரமைக்க வேண்டும் என்று கூறப்பட்டு உள்ளது. கோத்தகிரி அருகே அட்டவளை பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அளித்த மனுவில், அட்டவளையில் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். தொடர் மழையால் சாலை சேதமடைந்தது. அந்தரத்தில் தொங்கும் பாதையில் பள்ளி குழந்தைகள் உள்பட பொதுமக்கள் நடந்து சென்று வருகின்றனர். ஆபத்தான சூழ்நிலையில் கடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. ஆகவே சாலை வசதி ஏற்படுத்தி தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.

அடிப்படை வசதிகள்

முள்ளிகூர் ஊராட்சிக்கு உட்பட்ட அண்ணா நகர் பொதுமக்கள் அளித்த மனுவில், எங்கள் பகுதியில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு சரியாக கழிவுநீர் கால்வாய் இல்லை. நடைபாதை, குடிநீர் போன்ற அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்படாமல் உள்ளது.

இதனால் முறையாக குடிநீர் கிடைக்காமல் பாதிக்கப்பட்டு வருகிறோம். மேற்கண்ட வசதிகளை செய்து தரக்கோரி பலமுறை கோரிக்கை மனு அளித்தும், இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே நாங்கள் போராட்டத்தில் ஈடுபட உள்ளோம். அடிப்படை வசதிகள் செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டு உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com