அடிப்படை வசதிகள் கேட்டு பெண் அதிகாரியை அலுவலகத்தில் வைத்து பூட்டி பொதுமக்கள் போராட்டம்

ரெத்தினம்பிள்ளை புதூரில் அடிப்படை வசதிகள் கேட்டு பெண் அதிகாரியை அலுவலகத்தில் வைத்து பூட்டி காலிக்குடங்களுடன் பொதுமக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அடிப்படை வசதிகள் கேட்டு பெண் அதிகாரியை அலுவலகத்தில் வைத்து பூட்டி பொதுமக்கள் போராட்டம்
Published on

குளித்தலை,

குளித்தலை ஊராட்சி ஒன்றியம் திம்மம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்டது ரெத்தினம்பிள்ளை புதூர். இப்பகுதிக்கு குடிநீர் வசதி, மின்விளக்கு, சுடுகாடு ஆகிய அடிப்படை வசதிகளை நிறைவேற்றவேண்டும். ஊராட்சி செயலாளரை மாற்றவேண்டும் என வலியுறுத்தி நேற்று திம்மம்பட்டி ஊராட்சி செயலாளர் ரேவதியை ஊராட்சி அலுவலகத்தில் வைத்து அப்பகுதி மக்கள் பூட்டினர். மேலும் ஊராட்சி அலுவலகத்தின் நுழைவு வாயிலில் முட்களை வெட்டி போட்டு காலிக்குடங்களுடன் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து முற்றுகையில் ஈடுபட்டவர்கள் கூறியதாவது:-

ரெத்தினம்பிள்ளைபுதூரில் சுமார் 400-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறோம். எங்கள் ஊரில் கடந்த ஒரு வருடமாக சரிவர தண்ணீர் வினியோகம் செய்யப்படவில்லை. கடந்த 3 மாதமாக தண்ணீரின்றி தவித்து வருகிறோம். இங்குள்ள சின்டெக்ஸ் தொட்டிகள், அடிபம்புகள் ஆகியவற்றில் தண்ணீர் வரவில்லை. தரமற்ற மின் மோட்டார்கள் மற்றும் மின் வயர்களை ஊராட்சி நிர்வாகம் பொருத்தியுள்ளதால் தான் அடிக்கடி மின் மோட்டார் பழுதடைந்துவிடுகிறது.

தற்போது தண்ணீர் வசதி இன்றி மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகிறோம். சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் நடந்துசென்று அருகில் உள்ள ராஜேந்திரம், சத்தியமங்கலம் ஆகிய ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளுக்கு சென்று தண்ணீர் எடுத்துவந்து பயன்படுத்தவேண்டிய நிலை உள்ளது. சாலையில் உள்ள மின் விளக்குகள் எரியவில்லை. பழுதடைந்த மின்விளக்குகளை மாற்ற எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. சுடுகாடு இல்லாத காரணத்தாலும், மின்விளக்கு வசதி இல்லாததாலும் இறந்தவர்களின் உடலை எரிப்பதில் மிகுந்த சிரமம் ஏற்படுகிறது.

எங்கள் பகுதிக்கு பாதுகாப்பான நிரந்தர குடிநீர் வசதி, போதிய மின்விளக்கு வசதி மற்றும் சுடுகாடு கட்டுதல் போன்ற தேவைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் எனக்கூறி மாவட்ட கலெக்டர் கோவிந்தராஜிடம் மனு அளித்தோம். இருப்பினும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே எங்கள் பகுதியின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யவேண்டும் என வலியுறுத்தியும், சரிவர பணியாற்றாத ஊராட்சி செயலர் ரேவதியை இடமாற்றம் செய்யவேண்டும் என வலியுறுத்தி ஊராட்சி அலுவலகத்தை பூட்டி முற்றுகையில் ஈடுபட்டுள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த குளித்தலை வட்டாட்சியர் கலியமூர்த்தி, வட்டார வளர்ச்சி அலுவலர் (ஊராட்சிகள்) வெங்கடாசலம், போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜமோகன் ஆகியோர் முற்றுகையில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி பூட்டப்பட்டிருந்த ஊராட்சி அலுவலகத்தை திறந்தனர். தொடர்ந்து அதிகாரிகள் கூறுகையில், உடனடியாக தண்ணீர் தேவையை பூர்த்திசெய்ய நடவடிக்கை எடுக்கப்படும். மற்ற அடிப்படை தேவைகள் படிபடியாக நிறைவேற்ற தேவையான முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என உறுதியளித்தனர். மேலும் ரெத்தினம்பிள்ளைபுதூர் பகுதிக்கு நேரில் சென்று ஆய்வு செய்தனர். இதையடுத்து தங்கள் முற்றுகை போராட்டத்தை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர். ஊராட்சி செயலாளரை அலுவலகத்தில் வைத்து பூட்டி முற்றுகையிட்ட சம்பவம் அப்பகுதியில் பெறும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com