

திருவள்ளூர்,
திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர் ஒன்றியம் மேல்நல்லாத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் பாலாஜி (வயது 38). தனியார் நிறுவன ஊழியர். இவரது மனைவி காயத்ரி (35). இந்நிலையில் பாலாஜிக்கும் அவரது மனைவிக்கும் இடையே கடந்த சில மாதங்களாக அடிக்கடி சண்டை நடந்து வந்ததாக கூறப்படுகிறது.
நேற்று முன்தினம் மீண்டும் குடும்ப பிரச்சினை காரணமாக கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த பாலாஜி வீட்டில் சமையலுக்கு பயன்படுத்தும் கத்தியை எடுத்து காயத்ரியின் வயிற்றில் குத்தினார்.
இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டதில் ரத்தம் கொட்டியது. இதனால் ஆத்திரமடைந்த காயத்ரி, வலியோடு அதே கத்தியை எடுத்து கணவரின் வயிற்றில் குத்தி உள்ளார். இதில் பாலாஜியும் பலத்த காயமடைந்ததால், கணவன் மனைவி இருவரும் அலறி கூச்சலிட்டனர். இதைக்கண்ட அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து காயமடைந்தவர்களை மீட்டு, சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு சிகிச்சை பெற்று வந்த 2 பேரையும் மேல்சிகிச்சைக்காக சென்னை மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனர். கணவன் மனைவி இருவரும் அங்கு தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து மணவாளநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.