நிலத்தகராறு காரணமாக மனைவியுடன் தொழிலாளி தீக்குளிக்க முயற்சி: சேலம் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு

நிலத்தகராறு காரணமாக சேலம் கலெக்டர் அலுவலகத்தில் மனைவியுடன் தொழிலாளி தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
நிலத்தகராறு காரணமாக மனைவியுடன் தொழிலாளி தீக்குளிக்க முயற்சி: சேலம் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு
Published on

சேலம்,

சேலம் மாவட்டம் இடங்கணசாலை அருகே இ.மேட்டுக்காடு பகுதியை சேர்ந்தவர் கோவிந்தன் (வயது 56). தறித்தொழிலாளி. இவரது மனைவி மகேஸ்வரி (48). இவர்களது மகன் யுவராஜ் (35). இவர் விசைத்தறி தொழில் செய்து வருகிறார்.

இந்த நிலையில், கோவிந்தன் மற்றும் அவரது குடும்பத்தினர் நேற்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர். பின்னர் கோவிந்தன், அவரது மனைவி மகேஸ்வரி ஆகியோர் கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் முன்பு நின்று கொண்டு திடீரென மண்எண்ணெயை உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அப்போது, அங்கு பாதுகாப்புக்கு நின்ற போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். இது தொடர்பாக அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இதையடுத்து கணவன், மனைவி இருவரையும் கலெக்டரிடம் மனு கொடுக்க போலீசார் அழைத்து சென்றனர்.

இதுகுறித்து கலெக்டரிடம் கோவிந்தன் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

எனது குடும்ப சூழ்நிலை காரணமாக கடந்த 2002-ம் ஆண்டு அதே பகுதியை சேர்ந்த எனது உறவினர் ஒருவரிடம் நிலத்தின் பத்திரத்தை அடமானம் வைத்து ரூ.30 ஆயிரம் கடன் வாங்கியிருந்தேன். இதுவரையிலும் வட்டியுடன் சேர்த்து ரூ.75 ஆயிரத்தை 4 ஆண்டுகளுக்கு முன்பு கட்டிவிட்டேன். தற்போது நிலத்தின் பத்திரத்தை கேட்டால் தர மறுக்கிறார்கள். மேலும், ரூ.6 லட்சம் கொடுத்தால்தான் நிலத்தை தருவேன் என்று கூறி வருகிறார்கள். இதுகுறித்து போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுத்து எனது நிலத்தை மீட்டு தர வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதனிடையே, நிலத்தகராறு காரணமாக மனைவியுடன் தறித்தொழிலாளி தீக்குளிக்க முயன்ற சம்பவம் தொடர்பாக டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com