கொரோனா ஊரடங்கில் தளர்வு இருந்தாலும் புயல் காரணமாக மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் உத்தவ் தாக்கரே வேண்டுகோள்

கொரோனா ஊரடங்கில் தளர்வு இருந்தாலும் புயல் காரணமாக மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே வேண்டுகோள் விடுத்து உள்ளார்.
கொரோனா ஊரடங்கில் தளர்வு இருந்தாலும் புயல் காரணமாக மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் உத்தவ் தாக்கரே வேண்டுகோள்
Published on

மும்பை,

அரபிக்கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை புயலாகி மாறி இன்று (புதன்கிழமை) பிற்பகல் கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. மேலும் இதுகுறித்து வானிலை ஆய்வு மைய அதிகாரி கோசாலிகர் வெளியிட்டுள்ள தகவலில், நிசர்கா புயல் இன்று மதியம் வடக்கு மராட்டியம் மற்றும் தெற்கு குஜராத் கடலோரப்பகுதியில் ஹரிஹரகேஷ்வர்- டாமன் இடையே 100 முதல் 120 கி.மீ. வேகத்தில் கரையை கடக்கும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதில் ஹரிஹரகேஷ்வர் ராய்காட்டிலும், டாமன் மும்பையில் இருந்து 170 கி.மீ. தொலைவில் உள்ள யூனியன் பிரதேசம் ஆகும்.

இதேபோல பிரதமர் மோடியும் புயலை எதிர்கொள்ள எடுக்கப்பட்ட முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து குஜராத், மராட்டிய முதல்-மந்திரிகளிடம் பேசினார். மேலும் மத்திய அரசு தேவையான அனைத்து உதவிகளையும் செய்யும் என அவர் இருமாநில முதல்-மந்திரிகளிடம் உறுதி அளித்தார்.

இந்தநிலையில் மும்பை போலீசார் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக கடற்கரை, கடலோர பகுதிகளுக்கு செல்ல பொது மக்களுக்கு தடை விதித்து உள்ளனர். மேலும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் குடிசைவாசிகள் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர். இதேபோல பாந்திரா குர்லா காம்ப்ளக்ஸ் கொரோனா மையத்தில் சிகிச்சை பெற்ற 150 நோயாளிகள் பாதுகாப்பான இடத்துக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

இந்தநிலையில் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே அறிவுறுத்தி உள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், மாநிலம் இதற்கு முன் சந்தித்த புயலை விட இது மோசமாக இருக்கலாம். இன்று (புதன்), நாளை (வியாழன்) கடலோர பகுதிகளுக்கு முக்கியமானதாக இருக்கும். கொரோனா ஊரடங்கில் தளர்வுகள் செய்யப்பட்டு இருந்தாலும் அந்த பகுதிகளில் அடுத்த 2 நாட்களுக்கு ஊரடங்கு தொடரும். பொது மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்" என்றார்.

கொரோனா ஊரடங்கின் தளர்வாக இன்று முதல் மைதானங்கள், விளையாட்டு அரங்கங்களில் நடைபயிற்சி, தனிநபர் உடல் பயிற்சிக்கு அனுமதி அளிக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com