காதலிக்கு செலவு செய்த பணத்தை வாங்கி தருமாறு வாலிபர் ரகளை போலீஸ் நிலையம் முன்பு கையை அறுத்து கொண்டதால் பரபரப்பு

மதுரவாயலில் காதலித்த பெண் ஏமாற்றியதால், காதலிக்கு செலவு செய்த பணத்தை வாங்கித் தருமாறு போலீஸ் நிலையத்தில் வாலிபர் ரகளை செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
காதலிக்கு செலவு செய்த பணத்தை வாங்கி தருமாறு வாலிபர் ரகளை போலீஸ் நிலையம் முன்பு கையை அறுத்து கொண்டதால் பரபரப்பு
Published on

பூந்தமல்லி,

நடிகர் தனுஷ் நடித்த தேவதையை கண்டேன் படத்தில் நாயகி ஸ்ரீதேவி தனுசை காதலிப்பார். பின்னர் அவர் டீ விற்கும் நபர் என்று தெரிந்தவுடன் காதலை ஏற்க மறுத்து விடுவார். இதனால் தன்னை காதலித்து ஏமாற்றிய காதலி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தனுஷ் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுப்பார். படத்தில் வந்த இந்த காட்சி போல் தற்போது மதுரவாயலிலும் ஒரு நிஜ சம்பவம் நடந்துள்ளது. மதுரவாயல், மேட்டுக்குப்பத்தை சேர்ந்தவர் விக்கி என்ற கீரிப்புள்ளை (வயது 21). மெக்கானிக். இவர் நேற்று முன்தினம் இரவு மதுரவாயல் போலீஸ் நிலையத்திற்கு குடிபோதையில் வந்து தான் ஒரு பெண்ணை காதலிப்பதாகவும், அந்த பெண் முன்பு தன்னை காதலித்து விட்டு தற்போது காதலை ஏற்க மறுப்பதாகவும் புகார் தெரிவித்தார்.

மேலும் அப்போது குடிபோதையில் உளறுவதாக நினைத்து போலீசார் வாலிபரை கண்டுகொள்ளாமல் இருந்தனர். இதனால் ஒருகட்டத்தில் ஆத்திரமடைந்த அந்த வாலிபர் தனது பாக்கெட்டில் மறைத்து வைத்திருந்த பிளேடால் தன் கைகளை திடீரென அறுத்துக்கொண்டு ரத்தம் சொட்ட, சொட்ட போலீஸ் நிலைய வாசலில் நின்று கொண்டிருந்தார்.

ஆனால் அப்போதும் போலீசார் இதை கண்டுகொள்ளாததால், மனமுடைந்த அந்த வாலிபர் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் சாலையின் நடுவே நின்று தற்கொலை முயற்சியில் ஈடுபட முயன்றார். இதையடுத்து அங்கிருந்த போலீசார் அந்த வாலிபரை போலீஸ் நிலையத்தில் அழைத்து வந்து சமாதானப்படுத்தினர்.

பின்னர் அவரிடம் நடந்த விவரத்தை கேட்டறிந்தனர். அதில், அந்த வாலிபர் கூறும்போது, தான் ஒரு பெண்ணை உயிருக்கு உயிராய் காதலித்த போது, அவர் மீது கொண்ட அன்பால் அவருக்கு ரூ.3 ஆயிரம் செலவு செய்ததாக தெரிவித்தார். ஆனால் தற்போது அந்த பெண் தன்னை காதலிக்கவில்லை என்று கூறிவிட்டதால், செலவழித்த தொகையை திரும்ப வாங்கி தர வேண்டும் என்றும், அந்த இளம்பெண் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறினார்.
இதையடுத்து, போலீசார் அந்த வாலிபரிடம் போதை தெளிந்து திரும்பி வந்தவுடன் இது குறித்து பேசிக்கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளனர். ஆனால், அப்போதும் இதை ஏற்றுக்கொள்ளாத வாலிபர், காதலியின் வீட்டின் முன்பு தகராறு செய்தால் தான் தனக்கு நியாயம் கிடைக்கும் என்று கூறிவிட்டு அங்கிருந்து கிளம்பி சென்றார்.

காதலிக்கும் போது காதலிக்கு செலவு செய்த பணத்தை திரும்ப வாங்கி தருமாறு போலீஸ் நிலையம் முன்பு ரகளை செய்த காதலனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com