பெங்களூரு ஜெயநகர் தொகுதி தேர்தல் 55 சதவீதம் வாக்குகள் பதிவு நாளை ஓட்டு எண்ணிக்கை நடக்கிறது

பெங்களூரு ஜெயநகர் தொகுதியில் அமைதியான முறையில் ஓட்டுப்பதிவு நடந்தது. இதில் 55 சதவீதம் ஓட்டுகள் பதிவாகின. நாளை(புதன்கிழமை) ஓட்டு எண்ணிக்கை நடக்கிறது. கர்நாடக சட்ட சபைக்கு கடந்த மே மாதம் 12-ந் தேதி தேர்தல் நடைபெற்றது.
பெங்களூரு ஜெயநகர் தொகுதி தேர்தல் 55 சதவீதம் வாக்குகள் பதிவு நாளை ஓட்டு எண்ணிக்கை நடக்கிறது
Published on

பெங்களூரு,

இந்த தேர்தலுக்கு முன்பு தீவிர பிரசாரம் நடந்தது. பெங்களூரு ஜெயநகர் தொகுதியில் பா.ஜனதா வேட்பாளராக விஜயகுமார் எம்.எல்.ஏ. நிறுத்தப்பட்டார். அவர் பிரசாரம் மேற்கொண்டபோது, மாரடைப்பால் மரணம் அடைந்தார். இதையடுத்து ஜெயநகர் தொகுதியில் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.

இந்த நிலையில் ஜெயநகர் தொகுதியில் ஜூன் 11-ந் தேதி(அதாவது நேற்று) தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. பா.ஜனதா சார்பில் விஜயகுமாரின் சகோதரர் பிரகலாத் வேட்பாளராக நிறுத்தப்பட்டார். காங்கிரஸ் சார்பில் முன்னாள் மந்திரி ராமலிங்கரெட்டியின் மகள் சவுமியா ரெட்டி களத்தில் இறங்கினார். தேர்தலுக்கு பின்பு கர்நாடகத்தில் காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கூட்டணி ஆட்சி அமைந்தது. இதையடுத்து, காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவு அளிக்கப்படும் என்று ஜனதா தளம்(எஸ்) அறிவித்தது.

இந்த நிலையில் ஜெயநகர் தொகுதியில் திட்டமிட்டபடி நேற்று தேர்தல் நடைபெற்றது. இதற்காக 216 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு இருந்தன. அந்த வாக்குச்சாவடி மையங்களில் காலை 7 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்கியது. தொடக்கத்தில் வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தது. காலை 9 மணி நிலவரப்படி 10 சதவீத ஓட்டுகள் மட்டுமே பதிவாயின. நேரம் ஆக ஆக ஓட்டுப்பதிவு சற்று விறுவிறுப்பு அடைந்தது. காலை 11 மணிக்கு 22.2 சதவீதமும், 1 மணிக்கு 34.5 சதவீதமும் வாக்குகள் பதிவாயின. 3 மணிக்கு ஓட்டுப்பதிவு 43 சதவீதமாக இருந்தது. நேற்று மாலை ஓட்டுப்பதிவு முடிந்த நிலையில் 6 மணி நிலவரப்படி 55 சதவீதம் வாக்குகள் பதிவாகி இருந்தது.

தேர்தல் பணியில் சுமார் 2 ஆயிரம் பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். பதற்றமான வாக்குச்சாவடிகளில் துணை ராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். வாக்குச்சாவடிகளுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. வாக்குச் சாவடி எண் 216-ல் மின்னணு வாக்கு எந்திரத்தில் கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து அங்கு ஓட்டுப்பதிவு ஒரு மணி நேரம் தாமதமாக தொடங்கியது.

இன்போசிஸ் தலைவர் நாராயணமூர்த்தி, நடிகையும், மேல்-சபை உறுப்பினருமான தாரா, நடிகைகள் பாரதி விஷ்ணுவர்தன், மேக்னா ராஜ் உள்ளிட்டோர் வாக்களித்தனர். வாக்காளர்கள் ஆர்வமாக வந்து ஓட்டுப்போட்டனர். இந்த ஓட்டுப்பதிவு அமைதியான முறையில் நடந்து முடிந்தது.

இந்த தேர்தலில் பதிவான ஓட்டுகள் அடங்கிய மின்னணு வாக்கு எந்திரங்கள் ஓட்டு எண்ணும் மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. அங்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த தேர்தலில் பதிவான ஓட்டுகள் எண்ணிக்கை நாளை(புதன்கிழமை) நடக் கிறது. பகல் 12 மணிக்கு முடிவு தெரிந்துவிடும்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com