கொளுத்தும் வெயிலை சமாளிக்க நுங்கு விற்பனை அமோகம்

கொளுத்தும் வெயிலை சமாளிக்க உப்பிடமங்கலம் பகுதியில் நுங்கு விற்பனை அமோகமாக நடைபெறுகிறது.
கொளுத்தும் வெயிலை சமாளிக்க நுங்கு விற்பனை அமோகம்
Published on

உப்பிடமங்கலம்,

தமிழகத்தில் கடுமையான வெயில் கொளுத்தி வருகிறது. கரூர் மாவட்டத்தில் கடந்த 10 நாட்களாக வெயிலின் தாக்கம் 105 டிகிரி முதல் 109 டிகிரி வரை இருந்து வருகிறது. இதனால் பகல் நேரத்தில் பொதுமக்கள் வெளியே நடமாட முடியாத நிலையில் உள்ளனர். இதனால் தற்போது புதிதாக வெள்ளரி, தர்பூசணி, இளநீர், சர்பத் கடைகள் சாலையோரங்களில் ஆங்காங்கே திறக்கப்பட்டுள்ளன. வாகனங்களில் வருவோர், தங்களது வாகனங்களை நிறுத்தி அதனை வாங்கி செல்கின்றனர். அதுமட்டுமின்றி வறட்சி காரணமாக பெரும்பாலான இடங்களில் பனைமரங்கள் காய்ந்துவிட்டன. இதனால் குறைந்த எண்ணிக்கையில் உள்ள பனை மரங்களில் இருந்து நுங்கு வெட்டப்பட்டு விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. கோடைக்காலத்தில் நம்மை பாதுகாக்க இயற்கை அளித்துள்ள ஒரு வரப்பிரசாதம் தான் நுங்கு.

நோய் எதிர்ப்பு சக்தி

சிலருக்கு உடல் உஷ்ணம் காரணமாக எவ்வளவுதான் தண்ணீர் குடித்தாலும் தாகம் அடங்காது. அவர்கள் நுங்கை சாப்பிட்டால் தாகம் அடங்கிவிடும். ரத்தசோகை உள்ளவர்கள் நுங்கை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் விரைந்து குணமாகி உடல் சுறுசுறுப்பாகும். வெயில் காலத்தில் அம்மை நோய்கள் வருவதை தடுத்து உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை தரும். குழந்தைக்கும் நல்ல ஊட்டச்சத்து கிடைக்கும். நுங்கை மசித்து வியர்க்குரு கட்டிகள் இருக்கும் இடத்தில் பூசினால் விரைவில் சரியாகும். தோலும் பளபளப்பாகும். நுங்கை அரைத்து தேங்காய் பால் சேர்த்து குடித்தால் அல்சர், வயிற்றுப்புண் பிரச்சினை தீரும்.

ரூ.10-க்கு 2

இத்தனை சிறப்புகள் கொண்ட இந்த நுங்கு உப்பிடமங்கலம் பகுதி சாலையோரங்களில் தீவிரமாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இது குறித்து நுங்கு வியாபாரியிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடிய நுங்கு ரூ.10-க்கு 2 என விற்கப்படுகிறது. பொதுமக்கள் நுங்குகளை விரும்பி வாங்கி செல்கின்றனர். இதனால் நுங்கு விற்பனை அமோகமாக நடைபெறுகிறது. நுங்குகள் விரைவில் விற்று தீர்ந்து விடுகின்றன.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com